தமிழ்நாட்டில் மக்கள் உட்கொள்ளும் உப்பின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாக இருப்பதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். இதனை தொடர்ந்து, உப்பின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மாநில உத்தி வகுக்கப்படும் என்றும், மக்களின் உண்மையான உப்பு உட்கொள்ளல் அளவைக் கண்டறிய மாநிலம் தழுவிய அளவில் சிறுநீர் மாதிரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சுமார் 1.8 கோடி பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவச் சான்றளிக்கப்பட்ட இறப்புகளில் 50 சதவீதம் இதயம் மற்றும் ரத்தக் குழாய் தொடர்பான நோய்களாலேயே ஏற்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒரு நாளைக்கு 5 கிராமுக்கும் குறைவாகவே உப்பு எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கும் நிலையில், தமிழக மக்கள் சராசரியாக 7 முதல் 8 கிராம் வரை உப்பு உட்கொள்கின்றனர். இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், உடலுக்குள் செல்லும் உப்பில் 88 சதவீதம் வீட்டுச் சமையலின் மூலமே சேர்கிறது.
அன்றாட உணவில் வெறும் 1 கிராம் உப்பைக் குறைத்தாலே ரத்த அழுத்தம் கணிசமாகக் குறைந்து, இதய நோய் இறப்புகள் 7 சதவீதமும் பக்கவாத இறப்புகள் 10 சதவீதமும் குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஹோட்டல்களில் வழங்கப்படும் ஒரு சாதாரண சைவ சாப்பாட்டிலேயே சுமார் 7 முதல் 8 கிராம் வரை உப்பு இருப்பதாகக் கூறும் மூத்த மருத்துவர் பலராமன், சர்க்கரை அளவுக்கு உப்பு பயன்பாடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லை என்று கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், பொட்டாசியம் நிறைந்த சோடியம் குறைவான மாற்று உப்புகளைப் பயன்படுத்தும்போது இறப்பு விகிதம் குறையும் என்றாலும், தீவிர சிறுநீரக பாதிப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனையின்றி மாற்று உப்புகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும், மேஜை உப்பை விட கல் உப்பில் சோடியம் குறைவு என்பதால் அளவோடு பயன்படுத்துவதே பாதுகாப்பானது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.



