சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட விநாடிகள் மூச்சை அடக்கி பிடித்தால் நுரையீரல் பலமாக இருப்பதாக கூறப்படும் காணொளிகள் வைரலாகி வரும் சூழலில், மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
வயது வந்த நபர் ஒருவர் நிமிடத்திற்கு 12 முதல் 20 முறை சுவாசிப்பதே இயல்பானது. சமூக ஊடகங்களில் காட்டுவது போல அதிக நேரம் மூச்சை அடக்குவது நுரையீரலின் திறனை மேம்படுத்தாது; மாறாக, உடலில் கார்பன் டை ஆக்சைடு அதிகரிப்பதை மூளை தாங்கிக்கொள்ளும் திறனை மட்டுமே அது குறிக்கிறது என்று மருத்துவர்கள் விளக்குகின்றனர். குறிப்பாக, ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, வலிப்பு உள்ளிட்ட பிரச்னை உள்ளவர்கள் நீண்ட நேரம் மூச்சை அடக்கும்போது மயக்கம் உள்ளிட்ட தீவிர பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
நுரையீரலின் உண்மையான செயல்பாட்டை வீட்டிலேயே தீர்மானிக்க முடியாது; அதற்கு ஸ்பைரோமெட்ரி (Spirometry), பீக் ஃப்ளோ மீட்டர் (Peak Flow Meter), ஆஸிலோமெட்ரி (Oscillometry) போன்ற முறையான மருத்துவப் பரிசோதனைகளே (PFT) அவசியம். நாள்பட்ட இருமல், மூச்சுத் திணறல், மூச்சிரைப்பு, குறட்டை போன்ற அறிகுறிகள் தென்படுபவர்களும், 40 வயதைக் கடந்தவர்களும் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
நுரையீரலை பலப்படுத்த நடைபயிற்சி, நீச்சல், சைக்கிளிங் போன்ற ஏரோபிக் உடற்பயிற்சிகளுடன், உதரவிதானச் சுவாசம் (Diaphragmatic breathing), பர்ஸ் லிப் ப்ரீத்திங் மற்றும் பாக்ஸ் ப்ரீத்திங் (Box breathing) போன்ற முறையான மூச்சுப் பயிற்சிகளையும், சரிவிகித சத்துணவு மற்றும் புகைப் பழக்கத்தைத் தவிர்ப்பதையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.



