பிரிட்டனில் உள்ள சில்வர் ஸ்டோன் மைதானத்தில், நடைபெறும் கார்பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் அணி 38வது இடத்தை பிடித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சுற்றில் (Silverstone Racing Circuit), தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான அஜித்குமாரும், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யும் எதிர்பாராத விதமாக சந்தித்துக் கொண்டது இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. 34 ஆண்டுகால சினிமா பயணம் மற்றும் நீண்டகால திரையுலகப் போட்டி ஆகியவற்றைத் தாண்டி, இருவரும் ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்து கொண்ட இந்த நிகழ்வு இரு தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை (Michelin Le Mans Cup) கார் பந்தயத்தின் ஐந்தாவது சுற்று சில்வர்ஸ்டோனில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பந்தயத்தில் ஓட்டிய நடிகர் அஜித்தை நேரில் சந்தித்து ஊக்கப்படுத்த தமிழக முதல்வர் விஜய் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து சென்றிருந்தார்.
வெளியான வைரல் வீடியோக்களில், முதல்வர் விஜய் காரிலிருந்து இறங்கி ஓடிவந்து நடிகர் அஜித்தை பாசத்துடன் ஆரத்தழுவி வரவேற்ற காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது. மலையாள நடிகர் அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலரும் இந்தச் சந்திப்பு குறித்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து “Awesome” என சிலாகித்துள்ளனர்.
சில்வர்ஸ்டோன் மைதானத்தில் 44 கார்கள் கொண்ட பந்தயத்தை உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கும் வகையில், தமிழக முதல்வர் விஜய் பெருமிதத்துடன் பச்சைக்கொடி அசைத்து பந்தயத்தைச் துவக்கி வைத்தார்.
இந்த பந்தயத்தில், அஜித் குமாரின் ‘அஜித் ரெட்ஆன்ட் பை விராஜ்’ அணி, ஒட்டுமொத்த வெற்றியாளரை விட மூன்று சுற்றுகள் பின்தங்கி, இரண்டு மணி நேரப் பந்தயத்தை முடித்து, ஒட்டுமொத்தமாக 38வது இடத்தைப் பிடித்தது.
அஜித்தும் பிரெஞ்சு ஓட்டுநர் ரொமைன் வோஸ்னியாக்கும் பகிர்ந்துகொள்ளும் 16 ஆம் எண் கார், சனிக்கிழமை முன்னதாக நடைபெற்ற LMP3 புரோ/ஆம் பிரிவில் எட்டாவது இடத்திற்குத் தகுதி பெற்றிருந்தது. இருப்பினும், அந்தத் தகுதிச்சுற்று நிலையை பந்தயத்தில் புள்ளிகளைப் பெறும் இடமாக அவர்களால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. தற்போதைய சாம்பியன்ஷிப் தரவரிசையின்படி, ‘அஜித் ரெட்ஆன்ட் பை விராஜ்’ அணி சில்வர்ஸ்டோன் சுற்றில் எந்தப் புள்ளிகளையும் பெறாமலும், ஒட்டுமொத்தமாக 21 புள்ளிகளுடனும் உள்ளது.



