கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்கள் அடித்து அசத்தியதன் மூலம், அல் நஸ்ர் எஃப்சி அணி 4-1 என்ற கோல் கணக்கில் டமாக் எஃப்சி அணியை வீழ்த்தி சவுதி புரோ லீக் பட்டத்தை கைப்பற்றியது. 2019-ஆம் ஆண்டிற்குப் பிறகு அல் நஸ்ர் அணி வென்ற முதல் லீக் பட்டம் இதுவாகும். மேலும், அல் நஸ்ர் அணிக்காக ரொனால்டோ வென்ற முதல் பெரிய கோப்பையாகவும் இது அமைந்துள்ளது.
சவுதி புரோ லீக் தொடரின் இறுதி நாளில் நடைபெற்ற இந்த முக்கியமான போட்டியில், வெற்றி கட்டாயமான சூழலில் அல் நஸ்ர் அணி களமிறங்கியது. பரம எதிரியான அல் ஹிலால் எஸ்.எஃப்.சி அணியை விட இரண்டு புள்ளிகள் முன்னிலையில் இருந்த அல் நஸ்ர், இந்த வெற்றியின் மூலம் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது.
போட்டியின் தொடக்கத்தில் சாடியோ மானே மற்றும் கிங்ஸ்லி கோமன் ஆகியோரின் கோல்களால் அல் நஸ்ர் முன்னிலை பெற்றது. பின்னர் மோர்லே சில்லா அடித்த பெனால்டி கோல் மூலம் டமாக் அணி மீண்டும் போட்டிக்குள் வந்தது. இதற்குப் பிறகு போட்டியின் இரண்டாம் பாதியில் ரொனால்டோ தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார்.
முதலில் அசத்தலான ஃப்ரீ கிக் மூலம் கோல் அடித்த அவர், பின்னர் ஆட்டத்தின் இறுதியில் அருகிலிருந்து மற்றொரு கோலையும் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். போட்டி முடிவில் மாற்று வீரராக வெளியேறிய ரொனால்டோ உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார். ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டிய நிலையில், அல் நஸ்ர் அணி தங்களது 11வது லீக் பட்டத்தை கொண்டாடியது.
கோப்பையை பெற்ற பிறகு, கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது சமூக வலைதளத்தில் “இது எங்களுக்கு மிகவும் முக்கியமானது” என்று குறிப்பிட்டு அணியினருடன் கொண்டாடும் காணொளியை பகிர்ந்தார். அதில் “யல்லா நஸ்ர்” என்ற பிரபல ரசிகர் கோஷமும் இடம்பெற்றிருந்தது.
2020-ஆம் ஆண்டு ஜுவென்டஸ் எஃப்சி அணியுடன் சீரி ஏ பட்டத்தை வென்ற பிறகு, ரொனால்டோவுக்கு கிடைத்த முதல் பெரிய கோப்பை இதுவாகும். 2023-ஆம் ஆண்டு சவுதி அரேபிய கிளப் கால்பந்தில் இணைந்ததிலிருந்து, அந்நாட்டு லீக்கின் உலகளாவிய கவனத்தை அதிகரிப்பதில் ரொனால்டோ முக்கிய பங்காற்றி வருகிறார். ரொனால்டோவின் வருகைக்கு பிறகு நெய்மர் ஜூனியர், கரீம் பென்சிமா உள்ளிட்ட பல உலக நட்சத்திரங்களும் சவுதி கிளப்புகளுடன் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
Read more: “அமைச்சர் பதவிக்காக தவெகவுக்கு ஆதரவு கொடுக்கல..!” மெளனம் கலைத்த எஸ்.பி.வேலுமணி..



