டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி உலகத் தலைவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்டமான இரவு விருந்தில், இந்தியாவின் பாரம்பரிய மணம் வீசும் சிறுதானியங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் நாவில் கரையும் சைவ உணவுகள் பரிமாறப்பட்டு வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
பாரம்பரிய இந்தியச் சுவைகளையும் நவீன உணவு வகைகளின் நேர்த்தியையும் இணைத்து வடிவமைக்கப்பட்ட இந்த மெனுவில், தொடக்க உணவாக ‘கண்ட்வி மில்-ஃபூய்’ (Khandvi Mille-Feuille) மற்றும் ‘கும்ப் கலோதி’ (Khumb Galouti) ஆகியவை இடம்பெற்றன. கடுகு, தேங்காய், கறிவேப்பிலை தாளிக்கப்பட்ட கடலை மாவு ரோல்களுடன் குங்குமப்பூ மாம்பழம் மற்றும் தயிர் சேர்த்து இது பரிமாறப்பட்டது. மேலும், புதினா முத்துகளுடன் சீர்மாள் பிரெட்டின் மீது வைக்கப்பட்ட காளான் கபாப்களும் உலகத் தலைவர்களைக் கவர்ந்தன.
முழுக்க முழுக்க சைவ உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட இந்த விருந்தில், சின்னவெங்காயம் மற்றும் தக்காளி கிரேவியில் சமைக்கப்பட்ட ‘பன்னீர் லபாப்தார்’, இமயமலை காளான்கள் மற்றும் அஸ்பாரகஸ் சேர்த்து குங்குமப்பூ, பாதாம் பருப்புடன் சமைக்கப்பட்ட ‘குச்சி மர்மிக்’ ஆகியவை இடம்பெற்றன.
தென்னிந்தியாவின் அடையாளமாக, நறுமண மசாலாப் பொருட்கள் மற்றும் தேங்காய் எண்ணெய்யில் வதக்கப்பட்ட ‘கேரட் பீன்ஸ் பொரியல்’, துவரம் பருப்பு, தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்த ‘தக்காளி பெல்லே சாரு’ (ரசம்) ஆகியவையும் இடம் பெற்றிருந்தன. இந்தியாவின் பாரம்பரிய சிறுதானியங்களை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், பாசுமதி அரிசியுடன் கம்பு சேர்த்துத் தயாரிக்கப்பட்ட ‘மில்லெட் புலாவ்’ (சிறுதானிய புலாவ்) மற்றும் பீட்ரூட் ராய்தா, பல்வேறு இந்திய வகைப் பிரெட்டுகளும் பரிமாறப்பட்டன.
விருந்தின் நிறைவாக இரண்டு பாரம்பரிய இனிப்புகள் நவீன முறையில் பரிமாறப்பட்டன. பருவக்கால பழங்கள் மற்றும் லேசான கிரீமுடன் மொறுமொறுப்பான சுடச்சுட ‘ஜிலேபி’ சேர்க்கப்பட்ட பழைய டெல்லி ஃபுரூட் கிரீம் மற்றும் தங்க இலைகளால் அலங்கரிக்கப்பட்ட, நாவில் கரையும் சுவை கொண்ட ‘ஷாந்தூட் ஃபிரினி’ (Mulberry Phirni) ஆகியவை தலைவர்களை வெகுவாக ஈர்த்தன.
கண்டவி முதல் பொரியல் வரை, இமயமலை காளான்கள் முதல் ஜிலேபி, ஃபிரினி வரை இடம்பெற்ற இந்த முழுமையான சைவ விருந்து, உலகத் தலைவர்களுக்கு இந்தியாவின் பன்முக உணவு கலாச்சாரத்தை ஒரே மேடையில் சுவைக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.


