ரயிலில் பயணம் செய்யும் கர்ப்பிணி பெண்களுக்கு நீண்ட நேரம் அமர்ந்து அல்லது ஏறி இறங்குவதில் சிரமம் ஏற்படாமல் இருக்க, இந்திய ரயில்வே சார்பில் சில சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக கீழ் படுக்கை வசதி கிடைப்பது கர்ப்பிணி பெண்களுக்கு பயணத்தை சற்று எளிதாக்கும். ஆனால் இந்த வசதிகள் குறித்து போதிய தகவல் இல்லாததால், பலர் இதை பயன்படுத்தாமல் பயணம் செய்து வருகின்றனர்.
ரயில் பயணத்தின்போது கர்ப்பிணி பெண்களுக்கு கீழ் படுக்கை (Lower Berth) கிடைப்பதற்கான முன்னுரிமை வசதி உள்ளது. கர்ப்ப காலத்தில் மேல் படுக்கை அல்லது நடுப்படுக்கைக்கு ஏறுவது சிரமமாக இருப்பதால், கீழ் படுக்கை வசதி அவர்களுக்கு கூடுதல் வசதியை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகளில் கர்ப்பிணி பெண்களுக்காக சுமார் 6 முதல் 7 கீழ் படுக்கைகள் வரை ஒதுக்கீட்டில் இடம்பெறுகின்றன. மூன்றடுக்கு ஏசி பெட்டிகளில் சுமார் 4 முதல் 5 கீழ் படுக்கைகளும், இரண்டடுக்கு ஏசி பெட்டிகளில் சுமார் 3 முதல் 4 கீழ் படுக்கைகளும் இதற்காக ஒதுக்கப்படுகின்றன.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்திலேயே இந்த வசதியை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. முன்பதிவு மையத்தில் உள்ள பயணிகள் முன்பதிவு முறை (PRS) கவுன்டரில் கர்ப்பம் குறித்த தகவலை தெரிவித்து, தேவையான படிவத்தை பூர்த்தி செய்யலாம். இதன் மூலம் கிடைக்கும் ஒதுக்கீட்டின் அடிப்படையில் கீழ் படுக்கை கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.
இருப்பினும், குறிப்பிட்ட ரயிலில் ஒதுக்கப்பட்ட கீழ் படுக்கைகள் அனைத்தும் ஏற்கனவே நிரம்பியிருந்தால், டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு வேறு வழியிலும் உதவி பெற முடியும். பயணத்தின் போது ரயில் ஊழியர்களிடம் கர்ப்பம் குறித்த தகவலை தெரிவித்து, கீழ் படுக்கை தேவைப்படுவதை விளக்கலாம். அதே ரயிலில் கீழ் படுக்கை பெற்றுள்ள மற்றொரு பயணியிடம் சூழ்நிலையை எடுத்துக்கூறி, படுக்கையை மாற்றிக்கொள்ளும் உதவியையும் கேட்கலாம்.
கர்ப்ப காலத்தில் நீண்ட நேர ரயில் பயணம் மேற்கொள்ளும் பெண்கள், பயணத்திற்கு முன்பே தங்களது டிக்கெட் விவரங்களையும் இருக்கை ஒதுக்கீட்டையும் சரிபார்ப்பது முக்கியம். குறிப்பாக மேல் படுக்கை ஒதுக்கப்பட்டிருந்தால், பயணத்திற்கு முன்பே ரயில்வே முன்பதிவு மையம் அல்லது சம்பந்தப்பட்ட ரயில்வே ஊழியர்களிடம் தங்களுக்கு தேவையான வசதி குறித்து விசாரிப்பது பயனுள்ளதாக இருக்கும்.
அதே நேரத்தில், கீழ் படுக்கை ஒதுக்கீடு கிடைப்பது ரயில், வகுப்பு மற்றும் அந்த நேரத்தில் இருக்கும் இருக்கை நிலவரத்தைப் பொறுத்து மாறுபடலாம். எனவே, டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே கர்ப்பிணி பெண்களுக்கான கீழ் படுக்கை வசதி குறித்து தெளிவாக கேட்டு தெரிந்துகொள்வது பயணத்தை சிரமமின்றி திட்டமிட உதவும்.
கர்ப்ப காலத்தில் பாதுகாப்பான மற்றும் வசதியான பயணம் முக்கியம் என்பதால், ரயில்வே வழங்கும் இந்த வசதி குறித்த தகவல்களை முன்கூட்டியே தெரிந்துகொள்வது பெண்களுக்கு உதவியாக இருக்கும்.
Also Read: கையில் வைத்துக்கொண்டால் போதும்.. பல டிஜிட்டல் வேலைகளை செய்யும் குட்டி ஏஐ சாதனம்!



