ஆகஸ்ட் 26-ல் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்குப் பிறகு, நேபாளத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் மீண்டும் கடுமையான இயற்கை பேரிடர் ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர், 14 பேர் மாயமாகியுள்ளனர்.
தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நிலச்சரிவுகளும், நதி பெருக்கெடுப்புகளும் ஏற்பட்டு வீடுகள், பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. மனாங், மியாக்டி, பாக்புங், பர்பத் மற்றும் பால்பா ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தெற்கு தராய் பிராந்தியத்தில் வெள்ளப்பெருக்கும் மண் அரிப்பும் ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தின் பயங்கரத்தைக் காட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஒரு வீடியோவில், குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் இருந்த மலையின் ஒரு பகுதி சில நொடிகளில் மொத்தமாகச் சரிந்து விழுகிறது; இதைக் கண்டு பொதுமக்கள் அலறித் துடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
கண்டகி மாநிலத்தில் உள்ள பாக்புங் மாவட்டத்தில் 10 பேரும், மியாக்டியில் 6 பேரும், மனாங் மாவட்டத்தில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். லும்பினி மாநிலத்தின் பால்பா மாவட்டத்தில் 5 பேரும், தனுஷா மாவட்டம் மிதிலா நகராட்சியில் நிலச்சரிவில் சிக்கி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மாயமான 14 பேரில் மனாங்கில் 10 பேர், மியாக்டியில் 3 பேர் மற்றும் பாக்புங்கில் ஒருவர் அடங்குவர். மேலும், லாம்ஜுங், பாக்புங், மியாக்டி ஆகிய இடங்களில் சிலர் காயமடைந்துள்ளனர்.
நேபாளத்தின் தேசிய பேரிடர் அபாய குறைப்பு மற்றும் மேலாண்மை முகமையின் தகவலின்படி, காளி கண்டகி நதி பெருக்கெடுத்து ஓடுவதால் அதிகபட்ச சேதம் ஏற்பட்டுள்ளது. நாராயணி மற்றும் தின்னாவு நதிகளாலும் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த இயற்கை பேரிடரால் 747 குடும்பங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 143 வீடுகள் முற்றிலுமாக நாசமடைந்துள்ளதுடன், 51 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. கண்டகி மாநிலத்தில் மட்டும் 195 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 270 வீடுகள் ஆபத்தான நிலையில் உள்ளன. அங்கு 435 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1,500 பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பர்பத் மாவட்டத்தில் மட்டும் 106 வீடுகள் முழுமையாகவும், 4 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்து 162 குடும்பங்களைச் சேர்ந்த 540 பேர் வீடுகளை இழந்துள்ளனர். மேலும், 6 பாலங்கள் முழுமையாகவும், 2 பாலங்கள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. 3 அரசு அலுவலகங்கள், 15 கால்நடை கொட்டகைகள் அழிந்து 44 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. பல வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
மனாங் மாவட்டத்தின் நார்பூ பகுதியில் உள்ள ஹிம்லுங் ஹிமால் மலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். அவர்கள் 9 மலையேற்ற வீரர்கள் மற்றும் 13 உதவியாளர்கள் அடங்கிய 22 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்தவர்கள்.
அக்குழுவில் 10 பேர் பாதுகாப்பாக தொடர்பில் உள்ளனர்; மீதமுள்ள 10 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது.
காளி கண்டகி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சியாங்ஜா மற்றும் குல்மியை இணைக்கும் காங்கிரீட் பாலம் அடித்துச் செல்லப்பட்டு, இரு மாவட்டங்களுக்கும் இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக 144 மெகாவாட் திறன் கொண்ட காளி கண்டகி ‘ஏ’ நீர்மின் திட்ட அணையின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டு, மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மின் பரிமாற்ற பாதைகள் சேதமடைந்ததால், நில்கிரி, ரஹுகாட் உள்ளிட்ட பல நீர்மின் திட்டங்களில் 358 மெகாவாட்டிற்கும் அதிகமான மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.



