நேபாளத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மீண்டும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பெரும் இயற்கைப் பேரிடரை சந்தித்துள்ள நாட்டில், புதிய மழை மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடந்த மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இதுவரை 1,453 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5,000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். நேபாள தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் தகவலின்படி, சனிக்கிழமை வரை 1,451 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சிகிச்சையின்போது மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 13,795 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் உருவான திடீர் வெள்ளம் காரணமாக கடந்த மாதம் வடக்கு மற்றும் மத்திய நேபாளத்தின் பல நகரங்கள் மற்றும் கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், தற்போது மீண்டும் பெய்து வரும் தொடர் மழையால் பல பகுதிகளில் ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
ரூபந்தேஹி மாவட்டத்தில் உள்ள டினாவ் ஆற்றில் நீர்மட்டம் அபாய அளவை கடந்ததால், புட்வால் பகுதியில் ஆற்றங்கரையோரம் இருந்த 6 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஆற்றங்கரையில் வசிக்கும் சுமார் 200 வீடுகளுக்கு ஆபத்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர் மழையால் டினாவ் ஆறு மற்றும் அருகிலுள்ள நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 1,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். முதற்கட்டமாக ஆபத்தான பகுதியில் வசித்த 500 பேர் தற்காலிக முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பின்னர் அவர்கள் பாதுகாப்பான பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர்.
ஆறுகளில் அபாய அளவை தாண்டிய நீர்மட்டம்
பாக்மதி மாகாணத்தின் சித்வான் மாவட்டத்திலும் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது. அங்கு நாராயணி ஆறு மற்றும் ரியூ நீரோடையின் நீர்மட்டம் அபாய அளவை கடந்துள்ளது.
தேவ்காட் அளவீட்டு நிலையத்தில் நாராயணி ஆற்றின் நீர்மட்டம் அதிகாலை 5.15 மணியளவில் 9.23 மீட்டராக பதிவானது. அங்கு எச்சரிக்கை அளவு 7.3 மீட்டராகவும், அபாய அளவு 9 மீட்டராகவும் உள்ளது.
ரியூ நீரோடையின் நீர்மட்டமும் 3.92 மீட்டரை எட்டியது. இதன் எச்சரிக்கை அளவு 3.4 மீட்டராகவும், அபாய அளவு 3.8 மீட்டராகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவால் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு
தொடர் மழையால் சித்வான் மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இச்சாக்காமனா பகுதியில் சாலையின் ஒரு பகுதி மேலும் சரிந்ததுடன், மண் மற்றும் சேறு நிறைந்த நிலச்சரிவு காரணமாக இருபுறமும் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதே பகுதியில் மற்றொரு இடத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை முழுமையாக தடைபட்டுள்ளது.
கார்னாலி மாகாணத்திலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் தொடர்ந்து நீடிக்கிறது. பல்வேறு ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. முர்கு, ஹும்லா, டோல்பா, காலிகோட் உள்ளிட்ட பகுதிகளில் ஆறுகளின் நீர்மட்டத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
முகு மாவட்டத்தில் நக்னா-கம்காதி சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. காலிகோட் மாவட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவால் கார்னாலி நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஹும்லாவில் கார்னாலி வழித்தடத்தின் பல இடங்களிலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இதற்கிடையே, நவல்பராசி மேற்கு மற்றும் சப்தரி மாவட்டங்களில் நாராயணி மற்றும் சப்தகோசி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் சனிக்கிழமை 389 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், நீர்மட்டம் அதிகரித்தால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் நேபாள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Also Read: பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் 5 புயல்கள்.. 3 புயல்கள் அதிதீவிர நிலைக்கு உயர்வு! அடுத்து என்ன நடக்கும்? தீவிர கண்காணிப்பில் ஆய்வாளர்கள்!



