அரசு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக மதுரை வருகை தந்த தமிழக முதல்வர் விஜய், உலகப் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். முன்னதாக, அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளங் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்த அவர், சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி அருங்காட்சியகத்தையும் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
அரசு நிகழ்ச்சிகளை நிறைவு செய்து சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த முதல்வர் விஜய், மாலையில் கார் மூலம் மீனாட்சி அம்மன் கோவிலை நோக்கிப் புறப்பட்டார். கோரிப்பாளையம், நெல்பேட்டை, கீழவாசல், விளக்குத்தூண் மற்றும் ஜடாமுனி கோவில் தெரு வழியாக அவரது வாகனம் சென்றபோது, சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவில் வாசலை அடைந்த முதல்வரை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோவில் அறங்காவலர்கள் மற்றும் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். தொடர்ந்து, கோவில் அறங்காவலர் குழுத் தலைவரும் முன்னாள் அமைச்சர் தியாகராஜனின் தாயாருமான ருக்மணியம்மாள் முதல்வருக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்ற நிலையில், அவரது காலில் விழுந்து முதல்வர் விஜய் ஆசி பெற்று நலம் விசாரித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் சொக்கநாதர் சன்னிதிகளில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் கோவில் மரபு நடைமுறையில் உள்ளதால், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவரான முதல்வர் விஜயிடம் விதிமுறைகளின்படி உறுதிமொழிப் படிவம் பெறப்பட்டது. “இந்து மதத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்ற உறுதிமொழியில் கையெழுத்திட்ட பின்னர், அவர் கோவில் கருவறைக்குள் சென்று மீனாட்சி அம்மனையும், சொக்கநாதரையும் பயபக்தியுடன் தரிசனம் செய்தார். முதல்வரின் வருகையையொட்டி கோவில் வளாகம் மற்றும் மதுரை நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


