அரசு ஊழியர்கள் அலுவலகப் பணியில் இருக்கும்போது அதிகபட்சமாக தங்களிடம் எவ்வளவு ரொக்கப் பணம் வைத்திருக்கலாம் என்பது தொடர்பான தெளிவான கொள்கை முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில், அப்போதைய சார்பதிவாளர் கலா என்பவரிடம் கணக்கில் வராத ரூ.45,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து துறை ரீதியாக தன் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி அவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கக்கூடிய ரொக்கப் பண வரம்பு குறித்து மாநில அரசு தெளிவான ஒரு கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதி புகழேந்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், அரசு ஊழியர்களுக்கான ரொக்கப் பண உச்சவரம்பு குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், இதில் இறுதி முடிவெடுக்கக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாகவும் முறையிட்டார்.
அரசு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் எத்தனை? அந்த சோதனைகளில் கைப்பற்றப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு? எத்தனை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு அவை தற்போது என்ன நிலையில் உள்ளன? என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை இயக்குநர் முழுமையான விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
Read More : நாள் முழுவதும் பட்டாசு வெடிக்க அனுமதியில்லை..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!!



