தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலை மேம்பாட்டுப் பணியில், தமிழக அரசின் இருமொழிக் கொள்கைக்கு விரோதமாக மும்மொழியில் பெயர்ப்பலகை வைக்கப்பட்ட விவகாரத்தில், அலட்சியமாக செயல்பட்ட இரண்டு பொறியாளர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் (CRIF) கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட சாலை மேம்பாட்டுப் பணிகளில் அமைக்கப்பட்ட பெயர்ப்பலகையில் மூன்று மொழிகள் இடம்பெற்றிருந்தன. இது தொடர்பான தகவல் சமூக வலைதளங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பிய நிலையில், விவகாரம் அரசின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து துறை ரீதியாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், குறிப்பிட்ட அதிகாரிகளின் அப்பட்டமான கவனக்குறைவாலும் அலட்சியத்தாலும் இருமொழிக் கொள்கைக்கு எதிராக மும்மொழியில் பலகை வைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அரசின் கொள்கை முடிவை மீறிச் செயல்பட்ட உதவிப் பொறியாளர் மற்றும் உதவிக் கோட்டப் பொறியாளர் ஆகிய இரு அதிகாரிகளை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அத்துடன், மும்மொழியில் வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய அந்தப் பெயர்ப்பலகை உடனடியாக அகற்றப்பட்டு, அரசு விதிகளின்படி தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகை அதே இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.
பேரறிஞர் அண்ணா அவர்கள் கொண்டுவந்த இருமொழிக் கொள்கைதான் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் உயிர்க் கொள்கை; நிரந்தரக் கொள்கை! அதில், இன்றும் என்றும் என்றென்றைக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கவே எடுக்காது.
— Aadhav Arjuna (@AadhavArjuna) October 2, 2026
இந்நிலையில், 'மத்திய சாலை… pic.twitter.com/JJQH0zq8ZD
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “பேரறிஞர் அண்ணா கொண்டுவந்த இருமொழிக் கொள்கையே தவெக அரசின் உயிர்க் கொள்கை; அதில் என்றென்றைக்கும் சமரசம் கிடையாது. அரசின் கவனத்திற்கு வந்த சில மணி நேரங்களிலேயே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, போர்டும் மாற்றப்பட்டுள்ளது. அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் துறை ரீதியான கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்” என எச்சரித்துள்ளார்.
Read More : கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ்..!! தண்ணீர் லாரி மீது மோதியதில் சுக்குநூறாக நொறுங்கிய பயங்கரம்..!!



