கோயம்புத்தூர் மாவட்டம், தடாகம், மடத்தூர் பகுதியை சேர்ந்தவர் 24 வயதான பிரவீன். போட்டோகிராபராக வேலை செய்து வரும் கடந்த ஜூலை 2ம் தேதி போட்டோ ஆர்டர் வந்திருப்பதாக கூறிவிட்டு, ஒட்டன்சத்திரம் சென்றுள்ளார். ஆனால் அவர் மீண்டும் வீட்டிற்க்கு வரவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், பிரவீனை தீவிரமாக தேடி வந்தனர்.
ஆனால் விசாரணையின் போதே, கிணத்துக்கடவு ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் வாலிபரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் சடலத்தை மீட்டனர். சம்பவம் தொடர்பாக போத்தனூர் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் அது மாயமான பிரவீனின் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பிரேத பரிசோதனை அறிக்கை வராத நிலையில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், கரூரைச் சேர்ந்த 26 வயதான மனோஜ் குமார் மற்றும் அவரது நண்பர் 26 வயதான கார்த்திகேயன் ஆகியோர் பிரவீனை கொலை செய்து தண்டவாளத்தில் வீசியதாக கூறி கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதைத்தொடர்ந்து, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதாவது, கரூரைச் சேர்ந்த மனோஜும், கோவையில் உள்ள சாயிபாபா காலனியில் வசித்து வரும் பெண் ஒருவரும் கடந்த 4 ஆண்டுகளாக இன்ஸ்டகிராமில் பழகி காதலித்து வந்துள்ளனர். ஆனால் அந்த பெண், போட்டோகிராபர் ப்ரவீனுடமும் நெருக்கமாக பழகியுள்ளார். இவர்களின் பழக்கம் குறித்து கடந்த பிப்ரவரி மாதம் மனோஜுக்கு தெரியவந்துள்ளது. இதனால் பிரவீன் தனது காதலுக்கு இடையூறாக இருப்பதாக மனோஜ் நினைத்துள்ளார்.
பிரவீனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில், மனோஜ் பிரவீனின் இன்ஸ்டகிராம் ஐடியை கண்டுபிடித்து இருக்கிறார். மேலும், ஒட்டன்சத்திரத்தில் போட்டோஷூட் இருப்பதாக கூறி அவரை வரவழைத்திருக்கிறார். இரவு நேரத்தில் அங்கு சென்ற பிரவீனிடம், காலையில் தான் போட்டோசூட் என கூறி தங்கவைத்துள்ளார். அது மட்டும் இல்லாமல், மனோஜ் மற்றும் அவரது நண்பர் கார்த்திகேயன் ஆகிய இருவரும் சேர்ந்து அவருக்கு மதுவை ஊற்றி கொடுத்துள்ளார். பிரவீனுக்கு போதை தலைக்கேறிய நிலையில், அவரை வெளியே அழைத்துச் சென்ற இருவரும், பிரவீனின் கழுத்தை கயிறால் நெரித்து கொலை செய்துள்ளனர்.
கொலைக்குப்பின் தற்கொலை நாடகம் போல காண்பிக்க பிரவீனின் உடலை தண்டவாளத்தில் வீசியுள்ளனர். பின் அவ்வழியே வந்த ரயில் எறியதில் பிரவீனின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. பின்னர், இது தற்கொலை அல்ல கொலை என உறுதியானதைத்தொடர்ந்து குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
Also Read: இதை மட்டும் சேருங்க, சாதாரண தோசையை சத்தான தோசையா மாற்றலாம் – பிரபல மருத்துவர் டிப்ஸ்!



