வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக தீவிரமடைந்து வரும் தட்டம்மை (Measles) நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,100-ஐ தாண்டியுள்ளது. இன்று (அக். 2) ஒரே நாளில் 4 குழந்தைகள் தட்டம்மை பாதிப்பால் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 1,114 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
வங்கதேசத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தட்டம்மை நோய்த் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,221 பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதன்மூலம் நாட்டில் சந்தேகிக்கப்படும் ஒட்டுமொத்தப் பாதிப்புகளின் எண்ணிக்கை 1,94,084 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில், மருத்துவப் பரிசோதனைகள் மூலம் புதிதாக 21 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 21,623 ஆக உயர்ந்துள்ளது.
அந்நாட்டில் நிலவிய அரசியல் சூழல்களின் போது, முன்னாள் இடைக்கால ஆலோசகர் முகமது யூனுஸ் தலைமையிலான நிர்வாகத்தில் முறையான தடுப்பூசி செலுத்தும் திட்டங்கள் சரிவர முன்னெடுக்கப்படாமல் தொய்வு ஏற்பட்டதே இந்த நோய்த் தொற்று கட்டுக்கடங்காமல் பரவ முக்கியக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதால், பரவலைத் தடுக்கவும் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சைகளை விரைந்து வழங்கவும் வங்கதேச சுகாதாரத் துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
Read More : குட் நியூஸ்..!! அனைத்துப் பள்ளிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை..!! தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..!!



