டாக்டர்களின் பரிந்துரைச் சீட்டு தேவைப்படும் மருந்துகளின் சட்டவிரோத விற்பனையைத் தடுத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் உள்ள சில்லறை மருந்து விற்பனைக் கடைகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதைக் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
மருத்துவர்களின் அதிகாரப்பூர்வ பரிந்துரைச் சீட்டு (Prescription) இன்றி, போதை பழக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் உயிருக்கு ஆபத்தான மருந்துகள் விற்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் சிறார்கள் இத்தகைய போதை மருந்துகளுக்கு அடிமையாவதைத் தடுக்கும் வகையிலும், மருந்து விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் ‘மருந்துகள் விதிகளில்’ இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வரைவு விதிமுறைகளின் முக்கிய அம்சங்கள்:
* சில்லறை மருந்து கடைகளில், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு மூலம் வழங்கப்படும் மருந்துகள் அனைத்தும் சிசிடிவி கேமராவின் நேரடிப் பார்வையில் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
* கேமராவில் பதிவாகும் காட்சிகளை மருந்தக உரிமையாளர்கள் தங்களது கணினி அல்லது சேமிப்பகங்களில் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
* போதை மற்றும் மனநல பாதிப்புகளுக்கான மருந்துகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, சுகாதாரத்துறை அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் இந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ய சட்டத்திருத்தம் வழிவகுக்கும்.
* இந்த விதிமுறைகள் பொதுமக்களுக்கு நேரடியாக மருந்துகளை வழங்கும் சில்லறை விற்பனை கடைகளுக்கு மட்டுமே பொருந்தும்; மொத்த மருந்து விநியோகஸ்தர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மருந்தகக் கூட்டமைப்பினர் தங்களது கருத்துகளையும் ஆட்சேபனைகளையும் தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பரிசீலனை செய்யப்பட்டு, நாடு முழுவதும் இந்த புதிய சட்டம் இறுதி வடிவம் பெற்று அமலுக்கு வரும்.



