4,000 மடங்கு மாபெரும் வளர்ச்சி! உலகை ஆளும் இந்தியாவின் யுபிஐ டிஜிட்டல் சேவை!. புதிய வரலாற்று சாதனை!

upi NPCI

இந்தியாவின் யுபிஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவை நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல் – செப்டம்பர்) மாபெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தேசிய கொடுப்பனவு கழகத்தின் (NPCI) தரவுகளின்படி, கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 114 பில்லியனாக இருந்த பரிவர்த்தனை எண்ணிக்கை, இந்த ஆண்டு 27 சதவீதம் அதிகரித்து 145 பில்லியனை எட்டியுள்ளது. அதேபோல், பரிவர்த்தனை செய்யப்படும் மொத்த பணத்தின் மதிப்பும் 20 சதவீதம் உயர்ந்து ரூ.148 லட்சம் கோடியிலிருந்து ரூ.177 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.


செப்டம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த பரிவர்த்தனை எண்ணிக்கை 24.07 பில்லியனாகவும், பரிவர்த்தனை மதிப்பு ரூ.29.37 லட்சம் கோடியாகவும் சிறிதளவு குறைந்திருந்தது. இருப்பினும், ஆகஸ்ட் மாதத்தை விட செப்டம்பரில் நாட்களின் எண்ணிக்கை ஒன்று குறைவு என்பதால் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது. சராசரியாக நாளொன்றுக்கு நடக்கும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 791 மில்லியனாக இருந்த நிலையில், செப்டம்பரில் 802 மில்லியனாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.

அக்டோபர் 15 முதல் புதிய கட்டண நடைமுறை (MDR): இந்த வளர்ச்சிக்கு இடையே, வரவிருக்கும் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் குறிப்பிட்ட உயர் மதிப்புடைய வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு புதிய ‘மெர்ச்சன்ட் டிஸ்கவுண்ட் ரேட்’ (MDR) கட்டணம் அமலுக்கு வரவுள்ளது. இதன்படி, ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத எம்.டி.ஆர் கட்டணம் வசூலிக்கப்படும். இந்தக் கட்டணத்தை வணிகர்களே செலுத்துவார்கள் என்பதால், சாதாரணப் பயனாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. மேலும் நபருக்கு நபர் (P2P) அனுப்பப்படும் பணப்பரிமாற்றங்கள் எப்போதும் போல முழுமையாக இலவசமாகவே தொடரும்.

வசூலிக்கப்படும் எம்.டி.ஆர் கட்டணத்தில் 40 சதவீதம் வாடிக்கையாளரின் வங்கிக்கும், 30 சதவீதம் பேமெண்ட் கேட்வே நிறுவனங்களுக்கும், 20 சதவீதம் யுபிஐ செயலிகளுக்கும் (Google Pay, PhonePe போன்றவை), மீதமுள்ள 10 சதவீதம் செயலியின் முதன்மை வங்கிக்கும் பகிர்ந்தளிக்கப்படும். மேலும் ரூ.75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்சமாக ரூ.300 மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறு வணிகர்களைப் பாதுகாக்கும் வகையில், மாதம் ரூ.1 லட்சம் வரை யூபிஐ கியூஆர் கோட் மூலம் பணத்தைப் பெறும் 96 சதவீத வணிகர்களுக்கு இக்கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியச் சேவைகளுக்கான கட்டணங்கள்: ரயில்வே, டெலிகாம், எரிபொருள் மற்றும் காப்பீடு போன்ற அத்தியாவசியச் சேவைகளுக்கு ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு நிலையாக ரூ.5 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும். அதேவேளையில், பரஸ்பர நிதி (Mutual Funds) மற்றும் பங்குச்சந்தை தொடர்பான முதலீட்டுப் பரிவர்த்தனைகளுக்கு 0.02 சதவீத கட்டணம் (அதிகபட்சம் ரூ.300) பொருந்தும்.

உலகளவில் கால்பதிக்கும் இந்திய யுபிஐ: இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் யுபிஐ தனது சேவையை வேகமாக விரிவாக்கி வருகிறது. சமீபத்தில் உஸ்பெகிஸ்தான் நாடு இணைந்ததைத் தொடர்ந்து, தற்போது சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், மொரிஷியஸ், நேபாளம், பூடான், கத்தார், இலங்கை, கம்போடியா, கிரீஸ் உள்ளிட்ட 11 நாடுகளில் இந்திய யுபிஐ சேவை பயன்பாட்டில் உள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று தொடங்கப்பட்ட யுபிஐ சேவை, 2016-17 நிதியாண்டில் ரூ.0.07 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2025-26 நிதியாண்டில் ரூ.314 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் 4,000 மடங்குக்கும் அதிகமான வியக்கத்தக்க வளர்ச்சியாகும். ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்தின் அமைப்பான NPCI இயக்கும் யுபிஐ, நாட்டின் வர்த்தக பொருளாதாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

1newsnationuser5

Next Post

விலை உயர்வு முதல் மேட்டூர் அணை திறப்பு விழா செலவுகள் வரை!. முதலமைச்சர் விஜய் மீது இபிஎஸ் கடும் சாடல்!

Sat Oct 3 , 2026
தவெக அரசு அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை முழுமையாகக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், மேட்டூர் அணையைத் திறந்து வைப்பதற்காகச் செய்யப்பட்ட செலவுகள் குறித்தும் முதலமைச்சரை அவர் விமர்சித்துள்ளார். தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே. பானுமதியை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்ட பழனிசாமி, இந்த இடைத்தேர்தலை மக்கள் மீது “திணிக்கப்பட்ட தேர்தல்” என்று வர்ணித்தார். அதிமுக சார்பில் போட்டியிட்டு […]
eps cm vijay

You May Like