விசில் சின்னத்துக்கு நேராக கருப்பு மை.. மதுராந்தகம் இடைத்தேர்தலில் திடீர் பரபரப்பு!

40f97031e6f5f8e8d64bb8a3b22e38dc1ac1db09c6e598af3b03b0205d383ac9

வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான பிரச்சினைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக தண்டரை புதுச்சேரி வாக்குச்சாவடியில் விசில் சின்னத்துக்கு நேரான பட்டனில் கருப்பு மை இருந்ததாக எழுந்த புகாரால் அங்கு வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.


இன்று காலை 7 மணிக்கு மதுராந்தகம் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு வழக்கமான நடைமுறையாக காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்பிறகு வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யத் தொடங்கினர்.

தண்டரை புதுச்சேரி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் விசில் சின்னத்துக்கு எதிரே உள்ள பட்டன் பகுதியில் கருப்பு மை இருப்பது கவனத்திற்கு வந்தது. இதுகுறித்து புகார் எழுந்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்கு வாக்குப்பதிவை நிறுத்தினர். அந்த கருப்பு மை எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தற்போது ஆய்வு நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்பாகவே புக்கத்துறை பகுதியில் உள்ள 13-ம் எண் வாக்குச்சாவடியில் மற்றொரு இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இயந்திரத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சுமார் 15 நிமிடங்கள் வாக்குப்பதிவு தடைபட்டது. அதிகாரிகள் கோளாறை சரிசெய்த பின்னர் அங்கு மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மதுராந்தகம் தொகுதியில் இன்று நடைபெறும் தேர்தல், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடத்தப்படுகிறது. அதிமுக சார்பில் வெற்றி பெற்ற அவர் பின்னர் தவெகவில் இணைந்ததை அடுத்து தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

தற்போதைய இடைத்தேர்தலில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், அதிமுக சார்பில் கணிதா சம்பத், திமுக சார்பில் பரந்தாமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்ளிட்ட 27 பேர் போட்டியிடுகின்றனர்.

தொகுதி முழுவதும் 285 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 2.13 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். காலையிலேயே வாக்காளர்கள் பலர் வாக்குச்சாவடிகளுக்கு வந்த நிலையில், சில மையங்களில் வாக்காளர்கள் வருகை குறைவாக இருந்ததால் வெறிச்சோடியும் காணப்பட்டன.

இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 285 வாக்குச்சாவடிகளிலும் 2,614 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ள நிலையில், தண்டரை புதுச்சேரி வாக்குச்சாவடியில் ஏற்பட்ட இயந்திரப் பிரச்சினை தொடர்பான அதிகாரிகளின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Also Read: வேலைக்காக சென்ற இளம்பெண்.. மயக்க மருந்து கொடுத்து 2 நாட்கள் செய்த கொடூரம்!

Saranya

Next Post

வேகமெடுக்கும் இந்தியப் பொருளாதாரம்!. 2027 நிதியாண்டு வளர்ச்சியை 7.1 சதவீதமாக உயர்த்தியது உலக வங்கி!.

Tue Oct 6 , 2026
உள்நாட்டு நுகர்வு மற்றும் ஏற்றுமதியின் தொடர்ச்சியான எழுச்சி காரணமாக, இந்தியாவின் 2027-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகித முன்னறிவிப்பை உலக வங்கி 7.1 சதவீதமாக உயர்த்தியுள்ளது. முன்னதாக இந்த மதிப்பீடு 6.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியிடப்பட்ட தனது புதிய ‘இந்தியா மேம்பாட்டுப் புதுப்பிப்பு’ (India Development Update) அறிக்கையில், உலகளாவிய பொருளாதாரச் சவால்கள் தொடர்ந்து நீடித்தாலும், இந்தியாவின் நடுத்தரகாலப் பொருளாதாரக் கண்ணோட்டம் சாதகமாகவே உள்ளதாக உலக வங்கி […]
India FY27 Growth 30kb

You May Like