ஆந்திரப் பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 8 பக்தர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் சிக்மகளூரு பகுதியைச் சேர்ந்த சுமார் 20 பக்தர்கள், மந்திராலயம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமியை தரிசிக்க பிக்கப் டிரக் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இன்று அதிகாலை கர்னூல் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. விபத்து நடந்த இடம் கர்நாடகா–ஆந்திரா எல்லைக்கு அருகில் உள்ள தர்மபூர் சுங்கச்சாவடியிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது..
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த எம்மிக்கனூர் டிஎஸ்பி பார்கவி தலைமையிலான போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 5 பெண்கள், 2 ஆண்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட மொத்தம் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு எம்மிக்கனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாலை நேரத்தில் நிலவிய மூடுபனி அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவு விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. புனித யாத்திரைக்கு சென்றவர்கள் விபத்தில் உயிரிழந்த இந்தச் சம்பவம் சிக்மகளூரு பகுதி மக்களிடையெ பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read more: Gold Rate: மீண்டும் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஷாக்..! இன்றைய நிலவரம் இதோ..



