உக்ரைனின் கடற்படை ட்ரோன் தாக்குதலால், ரஷ்யாவின் தெற்குக் கடற்கரைக்கு அருகே சென்ற எண்ணெய் கப்பல் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் ரஷ்யாவின் புகழ்பெற்ற சுற்றுலா நகரான சோச்சி (Sochi) அருகே நடந்துள்ளது, இதனால் அப்பகுதியில் வானுயர கரும்புகை சூழ்ந்துள்ளது.
ரஷ்ய போக்குவரத்து அமைச்சகத்தின் தகவலின்படி, லைபீரியா நாட்டு கொடியுடன் இயங்கிய இந்தக் கப்பல் கருங்கடல் பகுதியில் தாக்கப்பட்டதாகவும், அதனால் தண்ணீரில் கச்சா எண்ணெய் எரிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயின் தாக்கம் கடுமையாக இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக நெருங்க முடியவில்லை. எனினும், கப்பலில் இருந்த 23 மாலுமிகளுமே இந்தியர்கள் ஆவர்; அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சோச்சி நகரிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களில், கடலில் தீப்பிழம்புகள் கொழுந்துவிட்டு எரிவதும், வானில் அடர்ந்த கரும்புகை சூழ்வதும் பதிவாகியுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரைகள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிகாரிகளின் எச்சரிக்கை:
சிரிஸ் (Sirius) பெடரல் பிராந்தியத்தின் தலைவர் டிமிட்ரிப் பிளிஷ்கின் (Dmitry Plishkin) கப்பல் தீ விபட்டை உறுதிப்படுத்தியதுடன், அப்பகுதி கடற்கரைகள் தற்காலிகமாக மூடப்படுவதாகவும் அறிவித்தார்.
“கருங்கடலில் ஒரு எண்ணெய் கப்பல் தீப்பிடித்து எரிந்துள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிரிஸ் கடற்கரைகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன. நீரின் தரமும், காற்றின் நிலையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று அவர் கூறினார். மேலும், ரஷ்யாவின் வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்து அதிகாரிகள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அதிகாரிகள் காற்று மற்றும் நீரின் தரத்தை கண்காணிக்கும் வரை, பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், ஜன்னல்களை மூடி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவும் உக்ரைனும் கருங்கடல் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் வர்த்தக கப்பல்களை தொடர்ந்து குறிவைத்து தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்கள் நடத்தி வருவதற்கான பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மற்றொரு சம்பவத்தில், கருங்கடலில் துருக்கி நாட்டிற்குச் சொந்தமான ‘எம்.வி. ரோயாத் மம்மாடோவ்’ (MV ROYAD MAMMADOV) என்ற சிவில் சரக்குக் கப்பல் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதனால் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு, குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு இந்தியர் உள்பட பல மாலுமிகள் காயமடைந்தனர்.
இதுகுறித்து ரோமானியாவில் உள்ள இந்தியத் தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, “கருங்கடலில் எம்.வி. ரோயாத் மம்மாடோவ் என்ற வணிகக் கப்பல் தாக்கப்பட்டது குறித்து நாங்கள் அறிந்தோம். முதற்கட்ட தகவல்களின்படி, 2 பேர் (வெளிநாட்டு குடிமக்கள்) உயிரிழந்துள்ளனர், மேலும் சில மாலுமிகள் காயமடைந்து ரோமானியாவில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுள் மூன்று இந்திய மாலுமிகளும் அடங்குவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து மேலும் விவரங்களை அறிய தூதரகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.



