இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளராக இருந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கரின் பதவிக்காலம் அக்டோபர் 4 அன்றுடன் நிறைவடைந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தேர்வுக் குழுவில் இணைந்த அவர், 3 ஆண்டுகளுக்கும் மேலாக அக்குழுவை சிறப்பாக வழிநடத்தினார். அவரது பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தனது முன்னாள் அணித் தோழருக்கு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற கம்பீர், அகர்கருடன் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகள் நெருக்கமாகப் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கம்பீரின் எக்ஸ் தளப் பதிவில், “அன்புள்ள அஜித் பாய், உங்களுடன் பணியாற்றியது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம். அந்த 3 ஐசிசி கோப்பைகளே அணிக்கு நீங்கள் அளித்த முன்னுரிமைக்கும், உங்களுடைய உறுதியான முடிவுகளுக்கும் சாட்சியாகும்.. எப்போதும் ‘அணிக்குத்தான் முதலிடம்’ என்ற கொள்கையுடன் செயல்பட்டீர்கள். வரலாறு உங்களுக்கு நிச்சயம் உரிய நீதியை வழங்கும் என்று நான் கூறுவேன். அனைத்திற்கும் நன்றி. உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!!” என்று கம்பீர் குறிப்பிட்டுள்ளார்.
அகர்கர் காலத்தில் இந்திய அணியின் சாதனைகள்:
கம்பீர் குறிப்பிட்டது போல, அஜித் அகர்கரின் தேர்வுக் குழுவின் கீழ் இந்தியா மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளது. அகர்கரின் குழு 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்பு சஹாலை கழற்றிவிட்டு அதிரடியான முடிவை எடுத்தது. அந்தத் தொடரில் இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
பின்னர் 2024 டி20 உலகக் கோப்பை அணியில் சஹால் மீண்டும் சேர்க்கப்பட்டார். அந்தத் தொடரை இந்தியா வென்றது. அதைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக ஹர்ஷித் ரணாவைத் தேர்வு செய்ததுடன், வருண் சக்கரவர்த்தியையும் ஒருநாள் அணிக்குத் திரும்பக் கொண்டுவந்தனர். இறுதிக் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையை முத்தமிட்டது. மேலும், 2026 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையைத் தக்கவைத்த முதல் அணியாகவும் இந்தியா வரலாறு படைத்தது. தற்போது பிரக்யான் ஓஜா (Pragyan Ojha) இடைக்காலத் தலைமைத் தேர்வாளராகப் பணியாற்றி வருகிறார்.
பிசிசிஐ-யின் புதிய அறிவிப்பு:
இதற்கிடையே காலி பணியிடத்திற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 7 டெஸ்ட் போட்டிகள் அல்லது 30 முதல் தரப் போட்டிகள் அல்லது 10 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 முதல் தரப் போட்டிகளில் விளையாடிய எந்தவொரு முன்னாள் வீரரும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
தற்போதுள்ள பிரக்யான் ஓஜா 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் தேர்வாளர் அவரை விட அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தால் மட்டுமே தலைமைத் தேர்வாளராக நியமிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. பிசிசிஐ விதிகளின்படி, அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவரே தலைமைத் தேர்வாளராக நியமிக்கப்படுவது வழக்கம்.



