பெரம்பூரில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றது செல்லுமா? அக்.14ம் தேதி தீர்ப்பு! சென்னை ஐகோர்ட் அறிவிப்பு!

Vijay Court 2026 scaled

சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்களான தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளைத் தொடுத்திருந்தனர்.


இந்த வழக்குகளை ஆரம்பக் கட்டத்திலேயே தள்ளுபடி செய்து நிராகரிக்க வேண்டும் எனக் கோரி முதல்வர் விஜய் தரப்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்னிலையில் தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்ற இறுதி விசாரணை தற்போது நிறைவடைந்துள்ளது.

விசாரணையின் போது விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி, உச்சநீதிமன்றத்தின் முக்கியத் தீர்ப்புகள் மற்றும் சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை மேற்கோள் காட்டி வாதாடினர். வேட்புமனுவில் சொத்து விவரங்கள் முழுமையாகத் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படும் புகார்களில் எந்தவொரு அடிப்படை முகாந்திரமோ ஆதாரமோ இல்லை எனவும் தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்த வாக்காளர் தரப்பு வழக்கறிஞர், பண்ருட்டியில் உள்ள ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து விவரங்களை விஜய் வேண்டுமென்றே மறைத்துள்ளதாகவும், அதற்கான சர்வே எண் மற்றும் விற்பனைப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால் இது மேலோட்டமான புகார் அல்ல என்றும், குற்ற வழக்குகளைப் போலவே சொத்துகளை மறைப்பதும் ஊழல் நடவடிக்கையே என்றும் வாதிட்டனர்.

மனுதாரரின் இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி லட்சுமி நாராயணன் சரமாரி கேள்விகளை முன்வைத்தார். “ரூ.600 கோடிக்கும் அதிகமான சொத்துகளை வெளிப்படையாகக் கணக்கு காட்டியுள்ள உச்ச நட்சத்திரமான விஜய், அதில் ரூ.30 கோடி சொத்துக் கணக்கு விடுபட்டதற்காக அவருடைய ஒட்டுமொத்த தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியுமா? தொழிலதிபர்களிடம் எந்தெந்த இடங்களில் சொத்துகள் உள்ளன என்பது முழுமையாக நினைவிருக்க வாய்ப்பில்லை; ஆடிட்டர் செய்த பிழைக்காக, முதல் முறையாகப் போட்டியிட்டு வென்ற ஒருவரின் வெற்றியைப் பறிக்க முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

அனைத்துத் தரப்பு வாதங்களும் முழுமையாக முடிவடைந்ததை தொடர்ந்து, தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி விஜய் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை வரும் அக்டோபர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Read More : தீபாவளிக்கு முன் அதிர்ச்சி!. உலகளவில் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது அமேசான்!. இந்தியாவிலும் நேரடி பாதிப்பு!

Next Post

வாடகைக்கு வீடு இருக்கா? மூதாட்டிக்கு நேர்ந்த துயரம்! மக்களே உஷார்.. திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்!

Thu Oct 8 , 2026
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள வசந்தம் நகரில் வசித்து வரும் மூத்த தம்பதியினரின் வீட்டிற்கு கடந்த 6-ஆம் தேதியன்று இளம்பெண் ஒருவர் வந்துள்ளார். தனக்கு குடியிருக்க வாடகை வீடு தேவைப்படுவதாக கூறி, அந்த முதியவர்களிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார். அவர்களின் வயது முதிர்வையும் தனியாக இருப்பதையும் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அப்பெண், எதிர்பாராத நேரத்தில் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 7 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு மின்னல் […]
Theft 2026

You May Like