அமேசானின் ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2026’ (Great Indian Festival) விற்பனை தொடங்குவதற்கு சற்று முன்பு, பிரபல இ-காமென்ஸ் நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 1,000 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இந்த புதிய ஆட்குறைப்பு நடவடிக்கையால் இந்தியாவிலும் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக இந்தியாவில் உள்ள சில்லறை விற்பனைப் பிரிவு ஊழியர்களை இந்த வேலை இழப்பு பாதித்துள்ளது. குறிப்பாக, நிறுவனத்தின் முக்கிய இ-காமென்ஸ் வலைத்தளத்தைக் கவனிக்கும் ஸ்டோர்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊழியர்களுக்கு அமேசான் அனுப்பிய செய்தி:
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பணிநீக்க மின்னஞ்சலில், “எங்களது கட்டமைப்பு, முன்னுரிமைகள் மற்றும் எதிர்காலத் தேவைகள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்த பிறகு, உங்களது பிரிவில் சில பணியிடங்களை நீக்கும் கடினமான வணிக முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு முறையான இழப்பீட்டுத் திட்டத்தையும் அமேசான் அறிவித்துள்ளது. “உங்கள் தற்போதைய வேலைவாய்ப்பு நிலையின் அடிப்படையில் முழுச் சம்பளம் மற்றும் பலன்களுடன் கூடிய பணிபுரியாக் காலம் (Non-working period) வழங்கப்படும். மேலும், நாடுகள் மற்றும் வேலைவாய்ப்பு நிலைக்கு ஏற்ப மாறுபடும் பிரிவினைப் பேக்கேஜ் (Severance package) மற்றும் இடைக்கால சலுகைகள் வழங்கப்படும்” என்றும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏஐ (AI) தொழில்நுட்பத்திற்கு மாறுவதற்கான நடவடிக்கை:
கடந்த ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு ஜனவரி வரை நீடித்த பல்வேறு கட்ட ஆட்குறைப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இந்தச் சமீபத்திய வேலை நீக்கமும் பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் ஆபரேஷன்ஸ் துறைகளில் தனது வளங்களை மூலோபாய ரீதியாக மாற்றிவரும் அமேசான், ஆட்டோமேஷன் முறையில் தனது பணியாளர்களை இன்னும் திறமையாக நிர்வகிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்காக கடந்த ஆண்டே அடுத்த தலைமுறை தரவு மையங்களை (Data Centers) உருவாக்க 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை நிறுவனம் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிஇஓ ஆண்டி ஜெஸ்ஸி (Andy Jassy) ஊழியர்கள் அனைவரும் ஏஐ தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். செயற்கை நுண்ணறிவை நிறுவனத்தில் விரிவாகப் பயன்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த கார்ப்பரேட் பணியாளர் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் முன்னர் தெரிவித்திருந்தார்.



