சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்யப்பட்ட விவகாரத்தில், அரசு எந்திரத்தையும் ஊழல் அதிகாரிகளையும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கடுமையாக சாடியுள்ளது. “ஏழை எளிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியைச் சுரண்டித்தான் இந்த அதிகாரிகள் வாழ வேண்டுமா? அதற்குப் பதிலாக அவர்கள் பிச்சை எடுக்கலாம்” என்று நீதிபதிகள் தங்களது கடுமையான அதிருப்தியைப் பதிவு செய்துள்ளனர். மேலும், தமிழகத்தின் அனைத்து அரசுத் துறைகளிலும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள அதிகாரிகளின் முழு விவரங்களையும் நான்கு வாரங்களுக்குள் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் பாதரக்குடியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்காக 2017 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் அரசு ஒதுக்கிய ரூ.2 கோடியே 35 லட்சம் நிதியானது மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படாமல், சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களால் முறைகேடாகச் சுருட்டப்பட்டுள்ளது.
இந்த நிதி மோசடியில் தொடர்புடைய சில அதிகாரிகள் எவ்வித தடையுமின்றி பதவி உயர்வு பெற்றுள்ளனர்; சிலர் ஓய்வுபெறவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தற்போது மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் வசம் நிலுவையில் இருக்கும் இவ்வழக்கின் விசாரணையை சிபி-சிஐடி பிரிவுக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இம்மனு நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இம்முறைகேடு தொடர்பாக ஒரு துணை ஆட்சியர் மற்றும் சில தாசில்தார்கள் உட்பட மொத்தம் 12 பேருக்கு எதிராக கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளதுடன், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்காக விசாரணை அதிகாரியை வருவாய்த்துறை செயலர் நியமித்துள்ளார். எனவே முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை” என்று வாதிட்டார்.
அரசு தரப்பின் விளக்கத்தைக் கேட்டு கடும் அதிருப்தியடைந்த நீதிபதிகள், சம்பவம் நடந்து பல ஆண்டுகள் கழித்தே கண்துடைப்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர். “குற்றம் செய்த அதிகாரிகளைப் பாதுகாப்பதற்காக மக்களின் வரிப்பணத்தில் அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிடுகிறார்கள். இத்தகைய அதிகாரிகளை வைத்துக்கொண்டுதான் அரசு நிர்வாகமே இயங்குகிறது. ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கும் பணத்தில் ஊழல் செய்வதற்கு பதில் பிச்சை எடுக்கலாம். அந்த பனத்தை சுரண்டித்தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாழ வேண்டுமா?
ஆட்சி மாறினாலும் அரசு அதிகாரிகளின் ஊழல் மனநிலை மாறுவதே இல்லை; சமூகத்தில் 99 சதவீத அதிகாரிகள் ஊழல் செய்யக்கூடியவர்களாகவே மாறிவிட்டனர். படித்து முடித்தவுடன் எந்தத் துறையில் சேர்ந்தால் குறுக்கு வழியில் சம்பாதிக்க முடியும் என்ற மனப்போக்கே இன்று நிலவுகிறது. பணம் கொடுத்து வேலைக்கு வருபவர்கள் பிறகு ஊழலில் ஈடுபடாமல் என்ன செய்வார்கள்?” என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
தமிழகத்தின் அனைத்து அரசுத் துறைகளிலும் முறைகேடு மற்றும் குற்றச்சாட்டுகளுக்காக ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ள அலுவலர்களின் எண்ணிக்கை, அவர்கள் மீதான விசாரணை மற்றும் மேல்முறையீட்டு நிலவரங்கள் குறித்த விரிவான விவரங்களை 4 வாரங்களுக்குள் அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.



