புலிகள் அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் ஒருவர் நுழைந்ததைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் யார்க்ஷயர் வனவிலங்குப் பூங்காவில் உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. புலியின் தாக்குதலுக்கு உள்ளான அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
டான்காஸ்டர் நகருக்கு அருகே அமைந்துள்ள இந்தப் பூங்காவில் சனிக்கிழமை பிற்பகல் 1.35 மணியளவில் அவசர உதவி கோரி தகவல் கிடைத்தது. புலிகள் இருக்கும் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் ஒருவர் சென்றிருப்பதை அறிந்த காவல்துறையினரும் மருத்துவக் குழுவினரும் உடனடியாக அங்கு விரைந்தனர். ஆனால், அந்த நபரைக் காப்பாற்ற முடியவில்லை.
புலிகள் அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் அந்த நபர் எவ்வாறு நுழைந்தார், பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் எப்படிக் கடந்தார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தில் புலிக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, பூங்காவுக்கு வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவுவதாகத் தகவல் கிடைத்துள்ள நிலையில், அவற்றைப் பகிர வேண்டாம் என்று காவல்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குத் தேவையான ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவத்துக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்துவதாகப் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் நிலையில், பூங்கா ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட யார்க்ஷயர் வனவிலங்குப் பூங்காவில், அழிவின் ஆபத்தை எதிர்கொள்ளும் அமுர் புலிகளுக்காக 2011ஆம் ஆண்டு ‘லேண்ட் ஆஃப் தி டைகர்ஸ்’ என்ற தனிப்பகுதி திறக்கப்பட்டது. சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்தப் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், வனவிலங்குப் பூங்காக்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கவனத்தை மீண்டும் அதிகரித்துள்ளது.
Also Read: அதிர்ச்சி! கடலில் கவிழ்ந்த படகு.. 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேர் மாயம்!



