திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் நிறைவு பொதுக்கூட்டத்தில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், தன்னிடம் ரூ.2 கோடி இருப்பதாக கூறினால் தனது தாயே அதை நம்பமாட்டார் என தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலை வெறும் ரூ.12 லட்சத்தை வைத்தே சந்தித்ததாகவும் அவர் கூறினார்.
ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ரமேஷ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், தாம் எம்எல்ஏவாகவோ அமைச்சராகவோ வருவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை என்றும், ஒருவரிடம் உண்மையான உழைப்பும் திறமையும் இருந்தால் அதை கண்டறிந்து வாய்ப்பு வழங்குவது தலைவரின் பொறுப்பு என்றும் குறிப்பிட்டார்.
ஸ்ரீரங்கம் தொகுதி முக்கியத்துவம் வாய்ந்த தொகுதி என்றும், தலைவரின் அறிவுறுத்தலை ஏற்று தன்னிடம் இருந்த ரூ.12 லட்சத்தை வைத்துக்கொண்டு தொகுதி நிர்வாகிகளை நம்பி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஸ்ரீரங்கத்தை தமிழகத்தின் முதன்மை தொகுதியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் கூறினார்.
கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தலைமை என்ற விஷயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதாகவும் ரமேஷ் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் வலுவான கட்டமைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் ஆட்சி குறித்து பேசிய அமைச்சர், விமர்சனங்கள் எவ்வளவு வந்தாலும் முதல்வர் விஜய் செயல்பாடுகள் மூலம் பதிலளிப்பார் என்று கூறினார். தமிழக அரசு 100 நாட்களில் மேற்கொண்ட நடவடிக்கைகள் நாடு முழுவதும் கவனம் பெறும் வகையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கர்நாடகாவில் அணை கட்டும் விவகாரத்தில் சட்டரீதியான அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மணப்பாறையில் பேருந்து வசதி தொடர்பான செய்தியை அறிந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருடன் முதல்வர் விஜய்யை ஒப்பிட்டு பேசிய அவர், “விஜய் எம்ஜிஆர் தான்… வாத்தியார் தான்” என புகழ்ந்து பேசினார்.
சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வடிவில் வெளியிடப்படுவதாகவும், இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் பேரவைத் தலைவரிடம் புகார் தெரிவிப்பதாகவும் அமைச்சர் விமர்சித்தார்.
சமூக வலைதளங்களில் வெளியாகும் மீம்ஸ் மற்றும் ரீல்ஸ்களை பார்த்து அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை என்றும், தங்கள் அரசு உண்மையான தகவல்களின் அடிப்படையிலேயே பதிலளிக்கும் என்றும் அவர் கூறினார். தங்கள் ஆட்சியை நோக்கி கேள்விகள் எழுப்பப்பட்டால் அதற்கு பதிலளிக்க தயாராக இருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் பேச வேண்டும் என்றும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அரசு வாகனத்தை பயன்படுத்தி ரோடு ஷோ சென்றதாக விமர்சிப்பதாகக் கூறிய அமைச்சர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கு பதிலாக அவதூறான கருத்துகளை முன்வைப்பதாக குற்றம்சாட்டினார்.
மேலும், சமூக வலைதளங்களில் நள்ளிரவு நேரங்களிலும் திமுகவினர் தங்களைப் பற்றி அவதூறான பதிவுகளை வெளியிடுவதாகவும், ஆபாசமான கருத்துகளை கூறுவதாகவும் அவர் விமர்சித்தார். அரசியல் விமர்சனங்களை தாண்டி மக்கள் பிரச்சினைகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் பேச வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இறுதியாக தனது குடும்பத்தின் பொருளாதார நிலை குறித்து பேசிய அமைச்சர் ரமேஷ், தனது குடும்பத்தில் யாரிடமும் ரூ.2 கோடி பணம் இல்லை என்றும், ரூ.12 லட்சத்தை வைத்துதான் சட்டமன்றத் தேர்தலை சந்தித்ததாகவும் மீண்டும் தெரிவித்தார். தன்னிடம் ரூ.2 கோடி இருப்பதாக யாராவது கூறினால், அதை தனது தாயே நம்பமாட்டார் என்றும் அவர் கூறினார்.
Also Read: மோசடி வழக்கில் இஸ்லாமிய பேச்சாளர் அப்துல் பாசித்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!!



