சென்னையில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு வித்திட்டதே முந்தைய அதிமுக அரசுதான் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலும் பெறப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் அழைத்து வந்து இந்த பிரம்மாண்ட திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதாகவும், ஆரம்பக் கட்டத்தில் மத்திய அரசின் நிதி கிடைக்காத சூழலிலும், மக்கள் நலன் கருதி மாநில அரசின் சொந்த நிதியை கொண்டே பணிகளை அதிமுக அரசு துரிதமாக தொடங்கியதாகவும் கூறினார்.
இப்பணிகள் தொய்வின்றி நடைபெற பிரதமரை பலமுறை நேரில் சந்தித்து நிதி ஒதுக்கீட்டை தொடர்ந்து வலியுறுத்தியதன் பலனாக, கடந்த 2024-ஆம் ஆண்டில் மத்திய அரசு ரூ.63,246 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து முறைப்படி ஒப்புதல் வழங்கியதாக கூறினார். அந்த தொடர் உழைப்பின் பயனாகவே தற்போது பூந்தமல்லி – வடபழனி வழித்தடம் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும், அன்று அதிமுக அரசு விதைத்த விதைகள் இன்று மாபெரும் விருட்சமாக வளர்ந்து நிற்பதை காணும்போது தமக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த பழனிசாமி நினைத்திருந்தால் மெட்ரோ மேம்பாலத்தின் மீது கூலிங் கிளாஸ் மாட்டிக்கொண்டு போட்டோ ஷூட் நடத்தியிருக்கலாம்; அல்லது சுரங்கப்பாதைக்குள் ஹெல்மெட் அணிந்து ரீல்ஸ் ஷூட் செய்திருக்க முடியும். ஆனால், அத்தகைய விளம்பர மற்றும் ஏமாற்று அரசியலில் எனக்கு துளியும் உடன்பாடு இல்லை.
நாம் பேசாமல் நமது செயல்களே பேச வேண்டும் என்ற கொள்கையை கொண்டவன் தான் என்றும், தமிழ்நாட்டில் தற்போது யார் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தொலைநோக்கு திட்டங்களே இன்றளவும் தமிழக மக்களை உயர்த்திக் கொண்டிருக்கின்றன என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


