புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (39). அரியலூர் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணியாற்றி வந்த இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குடும்பம் உள்ளது. முன்னதாக மழையூர் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, அங்குள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்த மௌனிகா (24) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.
மௌனிகா கர்ப்பமான நிலையில், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு பிரபாகரனை வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மௌனிகா முறையிட்டார். உயரதிகாரியின் தலையீட்டை அடுத்து, பிரபாகரன் மௌனிகாவை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் மௌனிகா தனது தாய் வீட்டிலேயே வசித்து வர, பிரபாகரன் அவ்வப்போது அங்கு சென்று வந்துள்ளார்.
இவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு தற்போது 7 வயதாகும் சூழலில், குடும்ப அட்டையில் குழந்தையின் பெயரைச் சேர்க்குமாறு மௌனிகா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இதற்குப் பிரபாகரன் ஒத்துழைக்காததால், மௌனிகா மீண்டும் காவல்துறை உயரதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதன் விளைவாகப் பிரபாகரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து உயரதிகாரிகளிடம் சென்று தனக்குப் பிரச்னை ஏற்படுத்தியதால், மௌனிகா மீது பிரபாகரனுக்கு ஆத்திரமும் பகையும் உருவானது.
இதையடுத்து மௌனிகாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்த பிரபாகரன், கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அவரை அரியலூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்தபோது பிரபாகரனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக கூறி, அக்டோபர் 10 அன்று சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். ஆனால், அதன் பிறகு மௌனிகா திடீரென மாயமானார். இதனால் சந்தேகமடைந்த மௌனிகாவின் பெற்றோர், மழையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பிரபாகரனைப் பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் உண்மை அம்பலமானது. அதே சமயம், பிரபாகரனின் நிலத்திற்கு அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மௌனிகாவின் உடல் மீட்கப்பட்டது.
தொடர் விசாரணையில், குடும்பத் தகராறில் மௌனிகாவை அடித்துக் கொலை செய்து உடலை இரவோடு இரவாகக் குழிதோண்டிப் புதைத்ததை பிரபாகரன் ஒப்புக்கொண்டார். உடனடியாகப் பிரபாகரனைக் கைது செய்த போலீசார், அவரை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று உடலைத் தோண்டி எடுத்து உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
Read More : ரேஷன் கார்டில் புதிய பெயர் சேர்ப்பது எப்படி? வீட்டிலிருந்தே வேலையை முடிக்கலாம்! முழு விவரம் உள்ளே!


