ட்ரோன் மூலம் வேட்டை! தேனி சிறையிலிருந்து தப்பிய கைதிகளில் 13 பேர் பிடிபட்டது எப்படி?

8e3b428e369d5a3e2806cba134a0630558faba596a653f481a5e5ea809f0b805

தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய சம்பவத்தில், இதுவரை 13 பேர் மீண்டும் பிடிபட்டுள்ளனர். ட்ரோன் கேமராக்கள் மூலம் வனப்பகுதிகளில் தேடுதல் நடத்தி எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இன்னும் நான்கு பேர் தலைமறைவாக உள்ளதால், அவர்களைப் பிடிக்க 17 தனிப்படைகள் களத்தில் இறங்கியுள்ளன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சிறையின் பாதுகாப்புப் பணியில் இருந்த ஒன்பது ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாகச் சிறைத்துறை வெளியிட்ட விளக்கத்தின்படி, 200 கைதிகள் தங்கும் வசதி கொண்ட தேனி மாவட்டச் சிறையில், சம்பவத்தன்று 334 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். இரவு சுமார் 10 மணியளவில் மூன்றாவது பிளாக்கில் இருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக மற்ற கைதிகள் கூச்சலிட்டனர். அங்கு சென்ற காவலரைத் தாக்கிய கைதிகள், அவரிடமிருந்த சாவிகளைப் பறிக்க முயன்றனர்.

முதன்மை நுழைவாயிலில் இருந்த காவலர்கள் அவர்களைத் தடுக்க முயன்றபோதும், தாக்குதலில் ஈடுபட்ட கைதிகள் சாவிகளைப் பயன்படுத்தி வாயிலைத் திறந்து தப்பியோடினர். இந்த மோதலில் காவலர் தங்கபாண்டி தலையில் பலத்த காயமடைந்தார். அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சில காவலர்களும் காயமடைந்தனர்.

கைதிகள் வெளியேறியதைத் தொடர்ந்து, சிறையைச் சுற்றியுள்ள கிராமங்கள், வனப்பகுதிகள் மற்றும் தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது. 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டது. ட்ரோன் கேமராக்கள் மூலம் வனப்பகுதிகளில் பதுங்கியிருந்த எட்டு கைதிகள் கண்டறியப்பட்டுப் பிடிக்கப்பட்டனர். ஏற்கெனவே பிடிபட்டவர்களுடன் சேர்த்து, மொத்தம் 13 பேர் மீண்டும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளனர்.

எஞ்சிய நான்கு பேரையும் பிடிக்கத் தமிழகக் காவல்துறையினர் கேரளக் காவல்துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். எல்லைப் பகுதிகளில் வாகனத் தணிக்கையும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தப்பிய கைதிகளில் ஒருவரான லிங்க பிரசாத், ஆட்டோவில் பயணித்தபோது காவல்துறையினரிடம் சிக்கினார். கண்டமனூர் சாலையில் ஆட்டோவில் ஏறிய அவர், கானாவிலக்கு அரசு மருத்துவமனை அருகே இறக்கிவிடுமாறு ஓட்டுநர் சின்னக்காளையிடம் கேட்டுள்ளார். தன்னிடம் ₹300 கொடுத்தால் செல்போன் மூலம் பணத்தை அனுப்புவதாகவும் கூறியுள்ளார்.

அப்போது ஆட்டோவைச் சோதனையிடுவதற்காகக் காவலர் ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளார். ஆட்டோவில் இருந்தவர் சிறையிலிருந்து தப்பிய கைதி என்பது தெரியவந்ததும், அவரை மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சம்பவத்தைத் தொடர்ந்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறையில் நேரில் ஆய்வு செய்தார். கைதிகள் தப்பியதற்கு மனிதத் தவறு காரணமாக இருந்ததாக அவர் தெரிவித்தார். பாதுகாப்புப் பணியில் கவனக்குறைவு காட்டியதாக ஒன்பது சிறைப் பணியாளர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கைதிகள் தப்பிய விதம், பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் பணியாளர்களின் பொறுப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 17 பேரில் 13 பேர் பிடிபட்டுள்ள நிலையில், எஞ்சிய நான்கு பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

Also Read: பெற்றோர்களே கவனம்! கழுத்தை இறுக்கி விளையாடிய சிறுவர்கள்.. துடிதுடித்து பலியான 7 வயது சிறுவன்!

Saranya

Next Post

மனைவியுடன் தகராறு.. 9 மாதக் குழந்தையைப் பாலத்திலிருந்து வீசிய தந்தை!

Wed Oct 28 , 2026
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு எல்லை மீறியதில், 9 மாத ஆண் குழந்தையைப் பாலத்திலிருந்து கீழே வீசியதாக 23 வயது இளைஞரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனையில் தீவிரக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறது. மும்பையின் காட்கோபர் ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள நடைமேம்பாலத்தில் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்போது 22 வயதான ஆர்த்தி ஜாபர் ஷேக், தனது 9 […]
WhatsApp Image 2026 07 06 at 11.38.03 AM

You May Like