பறவைகள் கல் சிலைகளாக மாறும் மர்ம ஏரி! உலகையே வியக்க வைக்கும் இயற்கை அதிசயம்!

BIRDS

உலகில் பல்வேறு இயற்கை அதிசயங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில், இறந்த பறவைகள் கல் சிலைகளைப் போல மாறி காட்சியளிக்கும் விசித்திரமான ஏரி ஒன்று ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் மர்மமான தன்மை உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது லேக் நேட்ரான் (Lake Natron). அதிகப்படியான உப்புத்தன்மை மற்றும் காரத்தன்மை கொண்ட இந்த ஏரி, உலகின் தனித்துவமான இயற்கை அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த ஏரிக்கு அருகில் அமைந்துள்ள ஓல் டோய்ன்யோ லெங்காய் எரிமலையில் இருந்து வெளியேறும் சோடியம் கார்பனேட் உள்ளிட்ட தாதுக்கள் ஏரியின் நீரில் கலக்கின்றன. இதனால் நீரின் காரத்தன்மை அதிகரிக்கிறது. சில நேரங்களில் ஏரியின் நீரின் வெப்பநிலை 60 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

இந்தச் சூழலில் உயிரிழக்கும் பறவைகள் மற்றும் வௌவ்வால்களின் உடல்களில் உப்புப் படிகங்கள் படிகின்றன. இதனால் அவற்றின் உடல்கள் இயற்கையாகப் பதப்படுத்தப்பட்டதைப் போல மாறி, கல் சிலைகளைப் போன்ற தோற்றத்தைப் பெறுகின்றன. உண்மையில், பறவைகள் உயிருடன் இருக்கும்போதே கற்களாக மாறுவதில்லை. இந்த ஏரியின் மற்றொரு சிறப்பம்சம் அதன் நீரின் நிறமாகும். அதிக உப்புத்தன்மை கொண்ட சூழலில் வாழும் குறிப்பிட்ட வகை நுண்ணுயிரிகள் மற்றும் பாசிகளால் ஏரியின் நீர் சில நேரங்களில் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

பெரும்பாலான பறவைகளுக்கு ஆபத்தானதாக இருக்கும் இந்த ஏரி, பிளமிங்கோ பறவைகளின் முக்கிய இனப்பெருக்கப் பகுதியாகவும் விளங்குகிறது. இப்பறவைகள் அங்குள்ள கடுமையான சூழலுக்கு ஏற்றவாறு வாழ்கின்றன. இயற்கையின் அழகும், ஆபத்தும் ஒரே இடத்தில் இணைந்திருப்பதற்கு தான்சானியாவின் லேக் நேட்ரான் ஏரி சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

READ ALSO:மேகதாது அணை விவகாரம்: டி.கே. சிவக்குமாருக்கு ரவி பச்சமுத்து கடும் கண்டனம்..!

maha

You May Like