தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று தமிழக முதலமைச்சராக பதவியேற்கிறார். தேர்தலில் 4 முனை போட்டி நிலவிய சூழலில், தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், ஆட்சியமைக்க தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால் கடந்த சில நாட்களாக அரசியல் பரபரப்பு நீடித்து வந்தது.
இந்த நிலையில், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவு விஜய்க்கு கிடைத்தது. இதையடுத்து ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், விஜயை ஆட்சியமைக்க அதிகாரப்பூர்வமாக அழைத்து முதலமைச்சராக பதவியேற்க அழைப்பு விடுத்தார்.
விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெறும் இந்த விழாவில் ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டுள்ளனர். விழாவிற்காக நேரு ஸ்டேடியம் முழுவதும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய தலைவர்கள், சிபிஎம், சிபிஐ, விசிக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் சினிமாத்துறையைச் சேர்ந்த பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
அரசியலுக்கு வந்த பிறகு தொடர்ந்து வெள்ளை சட்டை மற்றும் சந்தன நிற பேன்ட் அணிந்து வந்த விஜய், இன்று வெள்ளை சட்டை மற்றும் கருப்பு நிற பேன்ட், கருப்பு கோட் அணிந்து கம்பீரமான தோற்றத்தில் நேரு ஸ்டேடியத்திற்குள் என்ட்ரி கொடுத்தார். விஜயை காண ரசிகர்கள் ஆரவாரமாக வரவேற்றனர். விழாவில் விஜயின் தாய் சோபா சந்திரசேகர் மற்றும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் கலந்து கொண்டுள்ளனர். அவர்களைப் பார்க்க ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் நேரு ஸ்டேடியம் வந்தார். அவருக்கு பொன்னாடை போற்றி பூங்கொத்து கொடுத்து தவெக தலைவர் விஜய் வரவேற்றார். தொடர்ந்து விழா மேடைக்கு விஜய் வருகை தந்தார். விஜயுடன் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியும், முக்கிய தவெக நிர்வாகிகளும் மேடையில் அமர்ந்துள்ளனர். விஜய் விழா மேடைக்கு ஏறியது முதல் தொண்டர்கள் விசில் அடித்து கொண்டாடி வருகின்றனர். அரங்கம் முழுவதும் விசில் சத்தத்தால் எதிரொலிக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் விஜய் பதவி ஏற்க உள்ளார்.



