சென்னையில் உள்ள அம்மா உணவகத்தில் உணவு கேட்க வந்த இளைஞர் மீது கொதிக்கும் சாம்பார் ஊற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உணவு கேட்பதில் ஏற்பட்ட வாக்குவாதம்!
சென்னை பெரம்பூர் பகுதியில் மாநகராட்சி சார்பில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு உதயபானு என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர், வழக்கமாக இந்த உணவகத்திற்கு வந்து சாப்பிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், சம்பவத்தன்று சமையல் பணிகள் முழுமையாக நிறைவடைவதற்கு முன்பே ராஜேஷ் உணவு கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும் ஊழியர் உதயபானுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரத்தில் நடந்த விபரீதம்!
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஊழியர் உதயபானு அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரை எடுத்து ராஜேஷின் முகத்தில் ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால் இளைஞருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயமடைந்த ராஜேஷ் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், இளைஞர் மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றியதாகக் கூறப்படும் ஊழியர் உதயபானுவை போலீசார் கைது செய்தனர். பொதுமக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



