தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் 69.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக, தமிழகத்தின் 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி உட்பட நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் நேற்று நடந்தது. தமிழகத்தின் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
இத்தேர்தலில், 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள், 8,467 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில் 10.52 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள் ஆவர். 39 மக்களவை, விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 68,321 வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்தது. ஒரு சில வாக்குச்சாவடிகளில் இரவு 7.30 மணி வரை வாக்குப்பதிவு நீடித்தது.
தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் 69.46 சதவீதம், விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 64.54 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.48 சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 54.27 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.