இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான புதிய செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளது. இதில் தெற்கு இஸ்ரேலின் Nevatim விமானத் தளம் பாதிப்பை எதிர்கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், இஸ்ரேலில் ஏற்பட்ட சேதம் தொடர்பான புதிய செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளது. தொடர்புடைய படங்களை ஆய்வு செய்ததில், பெரிதாக பாதிப்பில்லை என்றே கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து, ஈராக்கில் உள்ள இராணுவ தளமொன்றின் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலானது, ஈரான் ஆதரவு பெற்ற மக்கள் அணிதிரட்டல் படையின் தலைமையகத்தின் மீது நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதலை நடத்தியவர்கள் தொடர்பில் எந்த தகவல்களும் வெளிவரவில்லை என்பதுடன் தாக்குதலுக்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் மீது PMF அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனினும், இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளதுடன் இஸ்ரேலும் தாக்குதல் தொடர்பான தனது பங்கை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.