உலக தடகள தொடர் ஓட்டப் பந்தயத்தில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள், 2-வது இடம் பிடித்து பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றன.
பெண்களுக்கான 4X400 மீட்டர் பிரிவில், ரூபால் சௌத்ரி, எம்.ஆர்.பூவம்மா, ஜோதிகா ஸ்ரீ தண்டி மற்றும் சுபா வெங்கடேசன் ஆகிய 4 பேர் கொண்ட அணி, பந்தய தூரத்தை 3 நிமிடம் 29.35 வினாடிகளில் கடந்து 2-வது இடத்தை பிடித்தது. ஜமைக்காவை சேர்ந்த அணி 3:28.54 பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தது. தொடர்ந்து, முஹம்மது அனஸ் யாஹியா, முஹம்மது அஜ்மல், ஆரோக்கிய ராஜீவ் மற்றும் அமோஜ் ஜேக்கப் ஆகியோர் அடங்கிய ஆடவர் அணி, 3 நிமிடம் மற்றும் 3.23 வினாடிகளில் கடந்து இரண்டாவது இடத்தை பிடித்தது. அமெரிக்கா 2:59.95 கடந்து முதலிடம் பிடித்தது.
இந்த இரண்டு அணிகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். ஆடவர் அணியில் உள்ள ஆரோக்கிய ராஜ் மற்றும் மகளிர் அணியில் உள்ள சுபா வெங்கடேசன் ஆகியோர் தமிழர்கள். ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு, உலக தடகள போட்டியில் 2-வது சுற்றில் 3 ஹீட்களிலும் தலா முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் தகுதி பெற்றன.
பாரிஸ் ஒலிம்பிக்கில் தடகள போட்டிகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்க உள்ளது. தற்போதைய சூழலில் இந்தியாவைச் சேர்ந்த 19 வீரர், வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர். இதில், நடப்பு சாம்பியனான ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா உள்ளிட்டோர் அடங்குவர்.
Read More : Oily Foods | எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை சாப்பிட்டுவிட்டீர்களா..? இனி மறக்காம இதை பண்ணுங்க..!!