பிரபல பாலிவுட் நடிகை மாளபிகா தாஸ் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால், அசாமில் இருந்து மும்பை வந்து அப்பார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வந்தார் மாளபிகா. கடந்த ஜூன் 6ஆம் தேதி இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, போலீசார் மாளபிகாவின் வீட்டை உடைத்துப் பார்த்தனர்.
அப்போது, அவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கூர்கானில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், மாளபிகாவின் பெற்றோர் வயதானவர்கள் என்பதால், அவர்கள் உடலை வாங்க வரவில்லை என்ற விஷயமும் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நண்பரும் நடிகருமான அலோக்நாத் பதக், மாளபிகாவின் உடலை வாங்கி தகனம் செய்திருக்கிறார். 32 வயதான மாளபிகா தாஸ், கடைசியாக கஜோலுடன் இணைந்து ‘டிரையல்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இவரின் இந்த எதிர்பாராத மரணம் திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.