நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான ’கல்கி 2898 ஏடி’ திரையரங்களில் வெளியாகி, பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்த நிலையில், பாக்ஸ் ஆபிசிலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இந்த படத்தில் மகாபாரதத்தைப் பற்றிய குறிப்பும், புராணக் கதைகளை எதிர்கால காலத்துடன் இணைத்த விதமும் பாராட்டப்பட்டு வருகின்றன. குருக்ஷேத்திரப் போரில் கிருஷ்ணரும் அஸ்வத்தாமாவும் பேசும் இறுதி உரையாடலுடன் இப்படம் தொடங்குகிறது. அமிதாப் பச்சன் அஸ்வதாமாவாக நடித்துள்ள நிலையில், கிருஷ்ணராக நடித்த நடிகரின் முகத்தை படக்குழுவினர் வெளியிடவில்லை.
பகவான கிருஷ்ணர் வரும் காட்சிகளில் அவரின் முகம் காட்டப்பட்டிருக்காது. எனவே, கல்கி 2898 ஏடி படத்தில் கிருஷ்ணராக யார் நடித்தார் என்று கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்தது. இந்நிலையில், கிருஷ்ணராக நடித்தது யார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் வேறு யாருமில்லை. பிரபல தமிழ் நடிகர் கிருஷ்ண குமார் தான். 2010ஆம் ஆண்டு காதலாகி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் நண்பராக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். தனுஷின் மாறன் படத்திலும் நடித்திருப்பார்.
இந்நிலையில். கிருஷ்ண குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கல்கி 2898 ஏடி போன்ற ஒரு பெரிய படைப்பில் கிருஷ்ணரின் பாத்திரத்தில் நடித்ததற்கு நன்றியுள்ளவனாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தனது கதாபாத்திரத்தில் நடித்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.