பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு அவரது வீட்டருகே ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது உணவு டெலிவரி செய்யும் நபர்கள் போல வந்த மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தில் அவரை சூழ்ந்து வெட்டி சாய்த்தது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆம்ஸ்ட்ராங் சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து விழுந்தார்.
இந்நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஆம்ஸ்ட்ரங்கை அவரது ஆதரவாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் உயிரிழந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சென்னை மாநகர போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுபோன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Read More : ஆம்ஸ்ட்ராங் கொலை..!! காவல்துறைக்கு அதிரடி உத்தரவு போட்ட முதல்வர் ஸ்டாலின்..!!