சீனாவின் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முறைதான் இந்த கோஸ்ட் வெட்டிங். அதாவது, திருமணம் செய்து கொள்ளாமலும், நிச்சயமான பிறகும் இறந்தவர்கள், மரணத்துக்குப் பின்னர் தனக்கென யாரும் இல்லை என்று வேதனை அனுபவிப்பதாக கூறப்படுகிறது. எனவே, உயிரிழந்த நபரை நேசித்தவர் தங்களது சொந்த பந்தங்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொள்ளும் சடங்குதான் பேய் திருமணம் எனும் கோஸ்ட் வெட்டிங். இறந்தவர்களின் புகைப்படம், உடைகள், அவர்கள் பயன்படுத்திய பொருள்களை வைத்து இந்த திருமணம் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், தைவானில் கார் விபத்தில் உயிரிழந்த காதலனை கோஸ்ட் வெட்டிங் முறையில் கரம்பிடிக்க அவரது காதலி முடிவு செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவானை சேர்ந்த யூ என்ற இளம்பெண், தனது காதலன், நண்பர்களுடன் ஜூலை 15ஆம் தேதி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கார் விபத்துக்குள்ளானதில் காதலன் மட்டும் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து அந்த இளம்பெண் யூ பேசுகையில், ”அந்த கோர சம்பவம் இன்னும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. விபத்து ஏற்பட்டதில் எனது காதலன், அவரது சகோதரி, எங்களது நண்பர் மூவரும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தனர். எனக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போதும், அவர்களை காப்பாற்ற முயற்சித்தேன். ஆனால், கடைசியில் என் காதலனை பறிகொடுத்துவிட்டேன். உண்மையான எங்களது காதலை கவுரவப்படுத்த நினைக்கிறேன். எனது காதலனின் தாயை கவனித்துக்கொள்ளவும், எனது வாழ்க்கையை அவர்களுடன் இணைந்து வாழ வேண்டும் என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.