மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே குணாபா பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் வைஷாலி (வயது 33). இவரது 35 வயது கணவர் விமல்ராஜ், கிறிஸ்துவ பாதிரியாராக உள்ளார். பாதிரியார் விமல்ராஜ், இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை கேளம்பாக்கம் அடுத்துள்ள பொன்மார் பகுதியில் குடும்பத்துடன் குடியேறி வசித்து வந்த நிலையில், அதே பகுதியில் உள்ள அட்வென்ட் சர்ச்சில் துணை பாதிரியாராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சமீப காலமாக, தம்பதியிடம் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி ஒட்டியம்பாக்கத்தில் தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு வந்த விமல்ராஜ், வைஷாலிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு விட்டதாகவும், மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் செல்லும்போது உயிரிழந்து விட்டதாகவும், அவரது சடலத்தை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், மும்பையில் இருந்த வைஷாலியின் பெற்றோருக்கு இந்த தகவலை சொன்னதும் அவர்கள் பதறியடித்து சென்னைக்கு வந்தனர். அப்போதுதான், வைஷாலியின் கழுத்தில் காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், தாழம்பூர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து விமல்ராஜிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது பல அதிர்ச்சி தகவல் வெளியானது.
எப்போது பார்த்தாலும் வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்ததால், ஆத்திரத்தில் மனைவியை கீழே தள்ளி, கழுத்தில் காலை வைத்து கொன்றதாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, கொலை வழக்கில் பாதிரியார் விமல்ராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். இந்நிலையில், தன்னுடைய மகள் கொலை வழக்கில் மேலும் சந்தேகம் உள்ளதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து, இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்துமாறு ஐகோர்ட்டும் உத்தரவிட்டது. பின்னர், தனிப்படையினர் விசாரணையை துரிதமாக மேற்கொண்டனர். இதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதாவது, பாதிரியார் விமல்ராஜூக்கு, ஜெபஷீலா என்ற 30 வயது பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள இளைஞர்கள், கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்து வந்துள்ளனர்.
அதேபோல, வைஷாலியின் அம்மா வீடு அமைந்துள்ள மும்பை பகுதியில் தங்கி இருந்தபோது, அங்கிருந்த மெடிக்கல் ஷாப் ஒன்றில் இருந்து போதை மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வந்து, சென்னையில் விற்பனை செய்துள்ளார். இந்த மாத்திரைகளை கொரியர் மூலம் வாங்கி, உள்ளூர் இளைஞர்களின் அந்த கள்ளக்காதல் ஜோடி அதிக விலைக்கு விற்பனை செய்து வந்திருக்கிறது.
இந்த விஷயம் மனைவி வைஷாலிக்கு தெரியவந்த நிலையில், அவர் தகராறு செய்துள்ளார். மேலும், போலீசில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு பயந்துபோன பாதிரியார் விமல்ராஜ், தன்னுடைய கள்ளக்காதலி ஜெபஷீலாவிடம் விஷயத்தை சொல்லியுள்ளார். அதற்கு பிறகே, வைஷாலியை கொலை செய்ய இருவரும் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, போதை மாத்திரைகளை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த கோவிலம்பாக்கத்தை சேர்ந்த தினேஷ் (23), சந்திரசேகர் (19), அரவிந்த் (23), அஜய் (24), மைக்கேல் (33), கிறிஸ்டோபர் (எ) சங்கர் (44) ஆகியோர் உதவியுடன் வைஷாலியை கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது. எனவே இந்த வழக்கில், மற்றொரு வழக்குப்பதிவு செய்து பாதிரியாரின் கள்ளக்காதலி ஜெபஷீலாவையும், மேற்கண்ட கும்பல் என 7 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Read More : வாரத்திற்கு 5 பெண்கள்..!! அதுவும் இந்த மாநிலத்தில் தான் அதிகமாம்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!