fbpx

‘கடிதம் எழுதுவதுடன் கடமையை நிறுத்தி விட கூடாது முதலமைச்சரே..!!’ களத்தில் இறங்கிய அன்புமணி.. சம்பவம் இருக்கு!

மீனவர்கள் மீதான அடக்குமுறையை கண்டித்து பாமக சார்பில் 8-ம் தேதி இலங்கை தூதரகம் முன் முற்றுகை போராட்டம் நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாரம்பரிய கடல் பகுதியில் தமிழ்நாடு மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வங்கக் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாடு மீனவர்களின் மீதான சிங்கள கடற்படையினரின் அத்துமீறலும், அடக்குமுறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாரம்பரிய கடல் பகுதியில் தமிழ்நாடு மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழ்நாடும் வலியுறுத்தி வரும் போதிலும் அதை சிங்கள அரசு மதிக்க மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான இந்திய எல்லைக்கும், இலங்கை எல்லைக்கும் இடைப்பட்ட கடல் பரப்பு மிகவும் குறுகியது ஆகும். அதனால், தமிழ்நாட்டு மீனவர்களாக இருந்தாலும், இலங்கை மீனவர்களாக இருந்தாலும் எல்லையைக் கடக்காமல் மீன்பிடிக்க முடியாது. அதே நேரத்தில் அந்தப் பகுதிகளில் தான் இரு நாட்டு மீனவர்களும் காலம் காலமாக மீன் பிடித்து வருகின்றனர் என்பதால், அவர்களின் பாரம்பரிய மீன் பிடிக்கும் உரிமையை மதிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள மீனவர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், அதை மதிக்காத சிங்கள கடற்படை, பல நேரங்களில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழ்நாடு மீனவர்களை கைது செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் கைது எண்ணிக்கை அதிகரித்திருப்பது மட்டுமின்றி, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகளும் அதிகரித்து வருகின்றன. சிங்களக் கடற்படையினரின் அண்மைக்கால கொடிய அத்துமீறல்களுக்கு எடுத்துக்காட்டு தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் மீனவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் தான். வங்கக்கடலில் இரு படகுகளில் சென்று ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த தருவைக்குளம் மீனவர்கள் 22 பேர் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி கடல் நீரோட்டத்தின் காரணமாக இலங்கை கடல் எல்லைக்குள் அடித்துச் செல்லப்பட்டனர்.

அவர்களை கைது செய்து சிறையில் அடைத்த இலங்கைக் கடற்படை இரு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் விடுதலை செய்யவில்லை. அதுமட்டுமின்றி, அனைத்து மீனவர்களுக்கும் இலங்கை ரூபாய் மதிப்பில் தலா ரூ.3.5 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம், அதை செலுத்தாத வரை விடுவிக்க முடியாது என்று கூறிவிட்டது. அபராதத்தை செலுத்த முடியாத மீனவர்கள் இன்னும் சிறையில் வாடுகின்றனர். தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் தமிழ்நாடு மீனவர்களையும் கைது செய்து 6 மாதங்கள், ஓராண்டு, ஒன்றரை ஆண்டு என சிறை தண்டனை விதித்து வருகிறது சிங்கள அரசு. இத்தகைய கொடூர அணுகுமுறை காரணமாக கடந்த ஜூன் 16&ஆம் தேதி மீன்பிடி தொடங்கிய பிறகு இன்று வரையிலான மூன்றரை மாதங்களில் மட்டும் 404 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி 54 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக சேர்த்து தமிழ்நாடு மீனவர்களின் 192 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இன்றைய நிலையில் மட்டும் இலங்கை சிறைகளில் 162 பேர் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்ட மீனவர்களால் அவர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி, அவர்கள் பிடித்து வரும் மீன்களை சுத்தம் செய்தல், பதப்படுத்துதல், ஏற்றுமதி செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்யும் பத்து மடங்கு குடும்பத்தினரும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். அவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்பது தெரியவில்லை. மீனவர்களைக் காக்கவும், மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் கடமையை முடித்துக் கொள்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இந்தியப் பொருளாதாரத்தின் ஓர் அங்கம் ஆவர். கடல் மீன்கள் ஏற்றுமதியால் மட்டும் மத்திய அரசு பல்லாயிரம் கோடி வருவாய் ஈட்டுகிறது. அவர்கள் எல்லையில்லாமல் இலங்கைச் சிறைகளில் வாடுவதை அனுமதிக்க முடியாது. எனவே, இலங்கை சிறைகளில் வாடும் 162 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்ய வேண்டும். இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 192 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று இலங்கை அரசையும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகளையும் வலியுறுத்தி அக்டோபர் 8ம் தேதி சென்னையில் பாமக சார்பில் இலங்கை துணைத் தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இணைப் பொதுச் செயலாளருமான ஏ.கே.மூர்த்தி – பாமக பொருளாளர் திலகபாமா ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பாமக -வின் அனைத்து இணை மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள மீனவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்தார்.

Read more ; SBI வங்கியில் வேலை.. ரூ.85,920 வரை சம்பளம்..!! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..

English Summary

Anbumani Ramadoss has announced that he will protest against the oppression of fishermen by besieging the Sri Lankan embassy.

Next Post

எப்புட்ரா.. ரெண்டு குண்டு பல்பு-க்கு கரெண்ட் பில் ரூ.1,01,580..!! ஷாக் ஆன விவசாயி

Wed Oct 2 , 2024
A farmer from Palambuthur village near Kodaikanal received a text message asking him to pay electricity bill of Rs.1,01,580.

You May Like