நாடு முழுவதும் 25,000 க்கும் மேற்பட்ட புதிய 4 ஜி பி.எஸ்.என்.எல் தளங்கள் இணைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது
மத்திய அரசின் தற்சார்பு இந்தியா முயற்சியின் கீழ் ஒரு மைல்கல் நடவடிக்கையாக, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நாடு முழுவதும் 50,000-க்கும் மேற்பட்ட உள்நாட்டு 4 ஜி தளங்களை வெற்றிகரமாக நிறுவியுள்ளது. இது இந்தியாவின் டிஜிட்டல் இணைப்பு இலக்குகளை கணிசமாக மேம்படுத்துகிறது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), தேஜாஸ் நெட்வொர்க்ஸ், டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி-டாட்), ஐடிஐ லிமிடெட் போன்ற இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து இது மேற்கொள்ளப்படுகிறது. நாட்டின் தொலைத் தொடர்பு இணைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பத்தின் வலிமையை இது காட்டுகிறது. முற்றிலும் இந்திய நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும் பிஎஸ்என்எல்-லின் 4 ஜி நெட்வொர்க் “பூரண சுதேசி” (முற்றிலும் உள்நாட்டு) கண்டுபிடிப்பு என்ற கருத்தை உள்ளடக்கியதாகும். இது இந்திய தொலைத்தொடர்புத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குகிறது.
2024 அக்டோபர் 29 நிலவரப்படி, பிஎஸ்என்எல் 50,000-க்கும் மேற்பட்ட தளங்களை நிறுவியுள்ளது. அவற்றில் 41,000 க்கும் மேற்பட்டவை இப்போது செயல்பாட்டில் உள்ளன. கடந்த மூன்று மாதங்களில் 25,000 க்கும் மேற்பட்ட புதிய 4 ஜி தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் தாக்கம் மற்றும் இந்தியா முழுவதையும் தகவல் தொடர்பு மூலம் இணைப்பதற்கான பிஎஸ்என்எல்-லின் அர்ப்பணிப்பின் சக்திவாய்ந்த செயல்பாடாக உள்ளது.