மீண்டும் 2026ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சி வரும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தவெக கட்சியின் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது. இதில் பல லட்சக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர். இதுவரை அதிமுக தவிர மற்ற கட்சிகள் விஜயை எதிர்க்கும் விதமாகத்தான் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு அவர் எந்தவித பதிலும் சொல்லாத நிலையில், திடீரென்று கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது விஜய் அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் சொல்ல வேண்டாமென்றும், சிலவற்றிற்கு மட்டும் சரியான முறையில் பதிலளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்து இருந்தார். அதாவது, இன்று புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து பேசியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் செய்தி தொடர்பாளர் வீர விக்னேஸ்வரன், “முதல்வர் ஸ்டாலின் எங்கள் தலைவர் விஜய்யை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். அரசியல் எதிரிகளுக்கு இதுபோல பதில் அளிப்பது சரியானது கிடையாது. தமிழ்நாட்டில் தங்களுடைய குடும்ப ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக எதிரிகளை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிப்பது திமுகவின் டிஎன்ஏவில் இருக்கிறது.
கடந்த 1970இல் குடும்ப ஆட்சிக்கு எதிராகத்தான் எம்ஜிஆர் ஆட்சி செய்து அகற்றியும் காட்டினார். இதே வரலாறு வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திரும்பும். மேலும் வருகிற 2026ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் குடும்ப ஆட்சியை தகர்த்தெறிந்து விட்டு விஜய் ஜனநாயக ஆட்சியை அமைப்பார்” என்று பேசினார்.
Read More : மக்களே..!! ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு..!! அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்குமா..?