வெள்ளித்திரைக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு மவுசு இருக்கிறதோ, அதே அளவிற்கு தற்போது சின்னத்திரைக்கும் மவுசு எகிறியுள்ளது. இன்னும் சொல்ல போனால், பெண்களை பொறுத்தவரை வெள்ளித்திரையை விட, சின்னத்திரையையே அதிகம் விரும்புவது உண்டு. சீரியல்கள், ரியாலிட்டி ஷோ என பல விதமான நிகழ்ச்சிகளின் மூலம் மக்களை தங்களின் பக்கம் இழுத்து வைத்துள்ளனர் என்றே சொல்லலாம். மக்கள் மத்தியில் சின்னத்திரைக்கு இருக்கும் மவுசை புரிந்து கொண்ட வெள்ளித்திரை பிரபலங்கள் பலர், சின்னத்திரையில் களமிறங்கி உள்ளனர். உதரணமாக, கமல் ஹாசன், விஜய் சேதுபதி, விஷால், ஸ்ருதி ஹாசன், ஆரி என வெள்ளித்திரை பிரபலங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் TRP எப்போதுமே உச்சத்தில் தான் உள்ளது.
இப்படி வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு களமிறங்குவது தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள நிலையில், இப்போது வெள்ளித்திரை பிரபலமான விஜய் ஆண்டனியும் சின்னத்திரையில் களமிறங்குகிறார். இந்திய திரையுலக திரைப்பட இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் தான் விஜய் ஆண்டனி. இவர் திரைப்படங்களுக்கு இசையமைப்பதற்கு முன்னர் சின்னத்திரையில், இசையமைப்பாளராக இருந்துள்ளார். இவர் இசையமைத்த முதல் தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடர் ஆகும். இதனை தொடர்ந்து இவர் 2006-ஆம் ஆண்டு கனா காணும் காலங்கள், 2007-ஆம் ஆண்டு காதலிக்க நேரமில்லை போன்ற தொடர்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழில், ‘மகா நடிகை’ என்ற ரியாலிட்டி ஷோவில் களமிறங்க உள்ளார். இந்த ஷோவில் விஜய் ஆண்டனி நடுவர்களின் ஒருவராக களமிறங்கவுள்ளார். இவருடன் நடிகை அபிராமி மற்றும் சரிதா இருவரும் நடுவர்களாக பங்கேற்கவுள்ளனர். இதற்கான ப்ரோமோ வெளியாகி அதில் விஜய் ஆண்டனி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
Read more: “மலையாள படங்களுக்கு இசையமைக்க நான் தயார், ஆனால்…” ரசிகரின் கேள்விக்கு இளையராஜா சொன்ன பதில்..