பதிவு செய்யாமல் விற்கப்படும், வீட்டு மனைகளுக்கு தலா, 15,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று ரியல் எஸ்டேட் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து புதிய உத்தரவுகளையும் பிறப்பித்திருக்கிறது.
தமிழகத்தில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், 2017ல் அமலுக்கு வந்தது. இதற்காக, மாநில அளவிலான ரியல் எஸ்டேட் ஆணையம், தீர்ப்பாயம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டப்படி, எட்டு வீடுகள் அல்லது எட்டு மனைகள் அதற்கு மேற்பட்ட திட்டங்களை ஆணையத்தில் பதிவு செய்வது கட்டாயம். இவ்வாறு பதிவு செய்யப்படாத திட்டங்களில் வீடு, மனை விற்பனைக்கு, 15,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று ரியல் எஸ்டேட் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பான வெளியான உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: “ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்யாமல், விற்கப்படும் வீடு, மனைகளுக்கு எண்ணிக்கை அடிப்படையில் அபராதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி பகுதியில், தலா, 15,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மதுரை, கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், ஆவடி, தாம்பரம், வேலூர், திருநெல்வேலி, தஞ்சாவூர், தூத்துக்குடி மாநகராட்சிகளில், தலா, 12,000 ரூபாய் அபராதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
சென்னை பெருநகர எல்லையில் வரும் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், திண்டுக்கல், ஓசூர், நாகர்கோவில், கடலூர், காஞ்சிபுரம், கரூர், சிவகாசி, கும்பகோணம், காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை மாநகராட்சிகளில் தலா, 10,000 ரூபாய் அபராதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மற்ற நகராட்சிகளில் வீடு, மனைகளுக்கு தலா, 6,000 ரூபாய், பேரூராட்சிகளில் தலா 4,000 ரூபாய், ஊராட்சிகளில் தலா, 3,000 ரூபாய் என்ற அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும். இந்த தொகையை விதிக்கும் போது, மனைப்பிரிவு திட்டங்களில் அதன் மொத்த மதிப்பில் 2 சதவீதம்.. அடுக்குமாடி குடியிருப்பு என்றால், அதில் விற்கப்பட்ட வீடுகளின் மதிப்பில், 1 சதவீதம் ஆகியவற்றில், எது அதிகம் என்ற அடிப்படையில் முடிவு செய்யப்படும்” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more ; தமிழகத்தில் ஓய்வூதிய இயக்குனரகம் மூடல்… அரசின் அறிவிப்பிற்கு வலுக்கும் கண்டனம்…!