உங்களின் வீடு தேடி வேலைவாய்ப்பு’ என்ற உலக வங்கியின் அறிக்கையை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “உங்களின் வீடு தேடி வேலைவாய்ப்பு” ஆறு மாநிலங்களில் இளைஞர்களுக்கான வேலைகள் கண்டறியும் திட்டம்” என்ற தலைப்பிலான அறிக்கையை மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் இணைந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஆறு மாநிலங்கள் குறித்த விரிவான அறிக்கையை அளித்த உலக வங்கிக் குழுவை பாராட்டினார். உலக வங்கிக் குழு நாடு தழுவிய கட்டமைப்பை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். திறன் மேம்பாடு மற்றும் வேலைகள் குறித்த இத்தகைய ஆழமான கண்டறிதல்கள், புதிய கட்டமைப்புகளை உருவாக்கவும், மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு முற்போக்கான கொள்கைகளை உருவாக்கவும் பங்குதாரர்களுக்கு உதவும்.
வேலைகள் மற்றும் வேலைவாய்ப்பு வரையறையை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தக் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டு, பொருளாதார வாய்ப்புகள், அதிகாரமளித்தல் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டும். இந்தியாவை உலகளாவிய திறன் மையமாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், நாட்டின் மக்கள் தொகையே உலகப் பொருளாதாரத்தின் உந்து சக்தியாக இருக்கும் . இதற்காக, பள்ளிகளில் திறன் பயிற்சி தொடங்க வேண்டும் என்றும், தேசிய கல்விக் கொள்கை 2020 பள்ளிகளில் திறனை பிரதானப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.