நீலகிரி மாவட்டம் பந்தலூரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரது மகன் தமிழ்ச்செல்வன். இவர், ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த நிலையில், தன்னுடைய அம்மாவின் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அய்யன் கொல்லகொண்டான் கிராமத்திற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அங்கு ஆனந்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
தமிழ்ச்செல்வன் ஆனந்தியுடன் பழகிக் கொண்டிருந்த போதே வேறொரு பெண்ணையும் அவர் காதலித்து வந்துள்ளார். இதனால், ஆனந்தியை திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஆனந்தி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனந்தியின் தற்கொலைக்கு தமிழ்ச்செல்வன் தான் காரணம் என ஆனந்தியின் தந்தை மலைக்கனி, மற்றும் மகன் ராஜாராம் முடிவு செய்தனர்.
இதையடுத்து, தமிழ்ச்செல்வனை கொலை செய்வதற்காக நவம்பர் 24ஆம் தேதி தந்தை, மகன் இருவரும் இருசக்கர வாகனத்தில் ராஜபாளையத்தில் இருந்து கோவைக்கு வந்துள்ளனர். பின்னர், சம்பவத்தன்று துடியலூரில் தனியார் மருத்துவமனை முன்பு நின்று கொண்டு, தமிழ்ச்செல்வனை வரவழைத்துள்ளனர். இதையடுத்து, மூவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரென தந்தை – மகன் இருவரும் தமிழ்ச்செல்வனை கத்தியால் கழுத்தை அறுத்தும், மார்பு மற்றும் வயிறு பகுதிகளில் குத்தியும் கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றனர்.
இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து உடனடியாக மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்து தமிழ்செல்வனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துடியலூர் போலீசார் தமிழ்ச்செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய தந்தை, மகன் இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Read More : எத்தனை ஆதார் கார்டு இருந்தாலும் ஒரு மொபைல் நம்பர் போதும்..!! மக்களே இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..?