தியேட்டரில் ஒரு படம் பார்க்க போகும் போது, அந்த படம் எப்படி இருக்கும் என்று ஓரளவிற்கு தான் நமக்கு தெரியும். ஒரு சிலருக்கு அந்த படம் பிடிக்கலாம். மேலும் சிலருக்கு அந்த படம் பிடிக்காமல் போகலாம். ஆனால் படம் பார்க்க காசை கட்டி விட்டோம் என்பதற்காக அந்த படம் முடியும் வரை அங்கிருந்து விட்டு வர வேண்டி இருக்கும். இந்த அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கும். ஆனால் இது போன்ற பிரச்சனை இனி உங்களுக்கு இருக்காது?? ஆம், இனி நீங்கள் 150 ரூபாய், 200 ரூபாய் கொடுத்துவிட்டோம் என்பதற்காக 3 மணி நேரம் தியேட்டரில் உட்கார வேண்டாம்.
இதற்காக, மல்டிபிளக்ஸ் தியேட்டர் நிறுவனமான ஐநாக்ஸ் மற்றும் பிவிஆர் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவருக்கு பாதி படம் பார்த்து விட்டு மீதி படத்தை பார்க்க விருப்பம் இல்லை என்றால், 50 சதவீத டிக்கெட் கட்டணம் திருப்பித் தரப்படும். ஆம், உண்மை தான். மேலும், 25 முதல் 50 சதவீத படம் மீதம் பார்க்க வேண்டியது இருந்தால், 30 சதவீதம் டிக்கெட் தொகை திருப்பித் தரப்படும். இந்த வகையில், எவ்வளவு படம் பார்க்காமல் வருகிறோமோ, அதற்க்கான கட்டணம் திருப்பி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை குறித்து பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ரெனால்ட் கூறியுள்ளதாவது, வழக்கமான டிக்கெட் கட்டணத்தை விட 10 சதவீதம் கூடுதலாக கொடுத்து டிக்கெட்டை ரிசர்வ் செய்ய வேண்டும். அப்போது அவர்கள் புக் செய்யும் டிக்கெட் அவர்களின் இருக்கையுடன் இணைக்கப்படும். பின்னர் அவர்கள் ஏ ஐ கேமரா மூலம் கண்காணிக்கப்படுவார்கள். இதன் மூலம், ஒருவர் எப்போது உள்ளே வருகிறார் எப்போது வெளியே செல்கிறார் என்று அனைத்தையும் கண்காணிக்க முடியும். அதை வைத்து, அவர்களின் டிக்கெட் கட்டணம் கணக்கிடப்படும்.
சினிமா தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதில் மக்களுக்கு ஆர்வம் குறைந்ததால் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.