மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு அற்புதமான மனிதர் என்று நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 2 முறை பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். இவர், கடந்த 2004 – 2014ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்தவர். இவர், சீக்கிய மதத்தை சேர்ந்தவர். இதன் மூலம் இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமர் என்ற பெயரை பெற்றார். மன்மோகன் சிங் மத்திய நிதி அமைச்சராக செயல்பட்ட பிறகு தான் அவர் பிரதமராக பொறுப்பேற்று செயல்பட்டார். இந்தியாவின் பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்ட பெருமைக்குரியவர்.
இந்நிலையில் தான் மன்மோகன் சிங்கிற்கு 92 வயது ஆகிறது. வயது முதிர்வு காரணமாக டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மன்மோகன் சிங் ஓய்வெடுத்தார். இதற்கிடையே தான் அவரது உடல்நலம் மோசமானது. இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு காலமானார்.
மன்மோகன் சிங்கின் உடலுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும், அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பிற துறையை சேர்ந்த பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், மன்மோகன் சிங்கிற்கு இரங்கல் தெரிவித்து பேசியுள்ளார். சென்னை விமான நிலையத்திற்கு இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மன்மோகன் சிங் ஒரு அற்புதமான மனிதர். பெரிய பொருளாதார சீர்திருத்தவாதி. பெரிய ஸ்டேட்ஸ்மேன் (ஸ்டேட்ஸ்மேன் என்றால் இந்த இடத்தில் அரசியல் சார்ந்த கொள்கையை வகுப்பதில் நிபுணர்). மன்மோகன் சிங் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று உருக்கமாக கூறினார்.