fbpx

பொங்கல் தொகுப்பில் ரேஷன் அட்டைகளுக்கு ரூ.1000 பரிசுத்தொகை வழங்கப்படுமா…?

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; 2025-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி பரிசுத் தொகுப்பை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஒரு கிலோ அரிசி, சர்க்கரை ஆகியவற்றுடன் ஒரு முழுக் கரும்பும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுக ஆட்சியில் கடந்த இரு ஆண்டுகளாக பொங்கல் பரிசுத் தொகுப்பில் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1000 இந்த முறை காணாமல் போயிருக்கிறது. மக்களை ஏமாற்றும் வகையிலான இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.

2009-ஆம் ஆண்டு முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் அத்துடன் ரூ.1000 முதல் ரூ.2500 வரை பணமும் சேர்த்து வழங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.1000 பணம் நிறுத்தப்பட்டதுடன், பொங்கல் பரிசுத் தொகுப்பில் வெல்லம், பருப்பு வகைகள், கோதுமை, உப்பு உள்ளிட்ட 21 பொருள்கள் வழங்கப்பட்டன. அவை தரம் குறைந்தவையாக இருந்ததாகவும், அவற்றின் கொள்முதலில் ஊழல் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் அந்தப் பொருட்களுக்குப் பதிலாக மீண்டும் ரூ. 1000 வழங்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் ரூ.1000 நிறுத்தப்பட்டிருக்கிறது. இது சரியல்ல.

2024-ஆம் ஆண்டில் தேர்தல் வந்ததால் அந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் ரூ.1000 பணம் கொடுத்த தமிழக அரசு, 2025ஆம் ஆண்டில் தேர்தல் இல்லை என்பதால் பணம் வழங்கவில்லை என்று தெரிகிறது. 2026-ஆம் ஆண்டு தான் தேர்தல் வரும் என்பதால் அப்போது ரூ.1000 வழங்கி மக்களை ஏமாற்றி விடலாம் என்று தமிழக அரசு நினைக்கிறது. இது மக்களை முட்டாள்களாக்கும் செயல். நிதி நெருக்கடி, மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்பன போன்ற காரணங்களைக் கூறி மக்களுக்கான உரிமைகளை அரசு மறுக்கக்கூடாது. மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய நிதியை போராடியோ, நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தோ பெற வேண்டிய மாநில அரசின் கடமை. அந்தக் கடமையிலிருந்து தவறியதற்காக மக்களை தமிழக அரசு தண்டிப்பது நியாயமற்றது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது மக்களுக்கு கூடுதலாக உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவதும், ஆட்சிக்கு வந்த பின்னர் உதவி வழங்க மறுப்பதும் திமுகவின் இரட்டை வேடம் ஆகும்.

கடந்த சில மாதங்களில் பெய்த கடுமையான மழையாலும், வெள்ளத்தாலும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இத்தகைய சூழலில் மக்கள் பொங்கலை ஓரளவாவது மகிழ்ச்சியாகக் கொண்டாட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். இதை உணர்ந்து நடப்பாண்டுக்கான பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 சேர்த்து வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

English Summary

Rs. 1000 prize money for ration cards in the Pongal package

Vignesh

Next Post

Tax: நாளை முதல் ரூ.5000 வரை அபராதம்... வருமான வரி செலுத்த இன்றே கடைசி நாள்...!

Tue Dec 31 , 2024
Today is the last day for individuals and companies to file income tax returns for the financial year 2024-25.

You May Like