புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள், பொதுமக்கள் இரவில் பட்டாசு வெடித்தும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மகிழ்வது வழக்கம். சென்னை, திருச்சி, கோவை, புதுச்சேரி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடலில் இறங்கவும், பட்டாசுகள் வெடிக்கவும் காவல் ஆணையர் தடை விதித்துள்ள நிலையில் 425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக் ரேஸில் ஈடுபட்ட 242 வாகனங்களை பறிமுதல் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.