நடிகர் விஜய் கடந்தாண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அக்டோபர் மாதம் விக்கிரவாண்டி வி.சாலையில் கட்சியின் முதல் மாநில மாநாட்டையும் பிரம்மாண்டமாக நடத்தினார். அந்த மாநாட்டுக்கு கூடிய கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவு பெறவுள்ள நிலையில், இதுவரை மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது.
விஜய் மக்கள் இயக்கத்தில் பொறுப்பு வகித்தவர்களே தற்போது தமிழக வெற்றிக் கழகத்திற்கும் மாவட்ட தலைவர்களாக தொடர்ந்து வருகின்றனர். எனவே, கட்சிக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய் உத்தரவிட்ட நிலையில், நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்நிலையில், தவெக மாவட்ட செயலாளர்களுடன் அந்தந்த மாவட்டங்களின் பொறுப்பாளா்களை நியமிப்பது குறித்து வெள்ளிக்கிழமையான இன்று முக்கிய ஆலோசனையில் விஜய் ஈடுபடப் போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பங்கேற்கவில்லை. தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
அதன்படி, இன்று தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் இறுதி செய்யப்படவுள்ளனர். 2 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர்கள் வீதம் நியமிக்கப்பட உள்ளனர். மொத்தம் 100 மாவட்டச் செயலாளர்களை நியமிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இறுதி செய்யப்பட்ட தவெக மாவட்ட செயலாளர்களை கட்சியின் தலைவர் விஜய் தனித்தனியாக சந்தித்து பல்வேறு ஆலோசனை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More : ”எனக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்துட்டாங்க”..!! பகீர் கிளப்பிய டென்னிஸ் வீரர் ஜோகோவிச்..!!